சட்டசபைக் கூட்டத் தொடர் நாளையுடன் முடிக்கப்படுகிறது.
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு, மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 9-ம் தேதிவரை இந்த கூட்டத் தொடரை நடத்துவதற்குப் பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளதால், சட்டசபைக் கூட்டத் தொடரை தள்ளி வைக்க வேண்டுமென்று கடந்த வாரமே திமுக மற்றும் காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது. அதை அரசு தரப்பில் ஏற்கவில்லை,
இதற்கிடையே, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால், இந்த மாவட்டங்களுக்கு இருசக்கர வாகனங்கள், பஸ், லாரி உள்ளிட்ட அனைத்து போக்குவரத்துகளும் தடை செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், இரண்டு நாள் விடுமுறைக்குப் பின், தமிழக சட்டசபை இன்று காலை கூடியது. ஆனால், திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் ஆகிய அனைத்து எதிர்க்கட்சிகளும் சபையைப் புறக்கணித்தன. மேலும், இந்த கூட்டத் தொடர் முழுவதையும் புறக்கணிக்கப் போவதாக அறிவித்தன.
இதையடுத்து, சட்டசபையில் சபாநாயகர் தனபால் ஒரு அறிவிப்பு வெளியிட்டார். கொரோனா பாதிப்பு காரணமாக, இந்த கூட்டத் தொடரை 9ம் தேதிக்குப் பதிலாக நாளையுடன் முடித்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டதாகக் கூறினார். இதனால், சபையில் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ள காவல்துறை, வேளாண்மைத் துறை, அறநிலையத் துறை, தொழிலாளர் நலன் துறை உள்பட அனைத்து துறைகளின் மீதும் நாளை ஒரே நாளில் விவாதம் நடத்தி முடிக்கப்பட உள்ளது. மேலும், புதிய சட்ட மசோதாக்களும் நாளையே நிறைவேற்றப்படுகிறது.