தமிழகம் முழுவதும் 7 நாட்களில் ஒரு லட்சத்து 25,793 பேர் கைதாகி ஜாமினில் விடுக்கப்பட்டுள்ளனர். மேலும் 85,850 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஏப்.14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்ற மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன. அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டுமே வெளியே வரலாம் என்றும் கூறியுள்ளன.தமிழகத்தில் 144 தடையை மீறி, இளைஞர்கள் பலரும் வெளியே சுற்றுகின்றனர். இதையடுத்து, காவல்துறையினர், வாகனங்களைப் பறிமுதல் செய்வதுடன், அவர்கள் மீது வழக்குகளும் பதிவு செய்கின்றனர். மேலும், கைது செய்து ஜாமீனில் விடுவிக்கின்றனர்.
மாநிலம் முழுவதும் நேற்று(மார்ச்31) மட்டும் 38,387 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடப்பட்டனர். 28,040 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், 34,178 எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, 14 லட்சத்து 47,944 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் 1,08,922 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 7 நாட்களில் ஒரு லட்சத்து 25,793 பேர் கைதாகி ஜாமினில் விடுக்கப்பட்டுள்ளனர். மேலும் 85,850 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை காவல்துறை வெளியிட்டுள்ளது.