கொரோனா தடுப்பு பணிக்கு ஒரு கோடி கொடுக்குமாறு பாஜகவுக்கு வக்கீல் நோட்டீஸ்..

Dmk issued lawyer notice to bjp president J.P.Nadda, for defamatory campaign.

by எஸ். எம். கணபதி, Apr 1, 2020, 14:57 PM IST

சமூக வலைத்தளங்களில், திமுக மீது திட்டமிட்டு பாஜகவினர் பொய்ச் செய்தி பரப்புவதாகக் கூறி, அக்கட்சிக்கு திமுக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், கொரோனா தடுப்பு பணிக்கு பாஜக ஒரு கோடி கொடுக்க வேண்டுமென்று கூறியிருக்கிறது.


இது குறித்து, திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்காக, அரசியல் எல்லைகளைக் கடந்து அனைவரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். ஆனால், இந்த இக்கட்டான நேரத்திலும், தி.மு.க. மீது அவதூறு பரப்பி அதன் மூலம் ஏதாவது அரசியல் லாபம் அடையலாமா என்று தமிழக பா.ஜ.க, திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறது.
தி.மு.க. அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி, தி.மு.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் தங்களது ஒரு மாதச் சம்பளம் ஆகியவற்றை வழங்கியுள்ளனர். மேலும், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பணத்தை ஒதுக்கியுள்ளனர். அத்துடன், தி.மு.க தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தின் வளாகத்தில் அமைந்துள்ள 'கலைஞர் அரங்கை' கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் தம்மைத் தனிமைப்படுத்திக் கொள்ளப் பயன்படுத்திக் கொள்ளவும் வழங்கியுள்ளது. தி.மு.க நிர்வாகிகளும் தங்களால் இயன்ற உதவிகளை அந்தந்தப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு உதவி வருகின்றனர்.


இவை அனைத்தையும் 'முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது' போல் மறைத்து, கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தி.மு.க. எதுவுமே செய்யவில்லை என பா.ஜ.க. தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்கள் மூலமாக அவதூறு பரப்பி வருகிறது. இதற்குத் தண்டனையாக கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கான 'தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு' அக்கட்சி ரூ.100 கோடி வழங்கிட வேண்டும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. அவர்களின் சார்பாக, வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் எல்.முருகன், டிவிட்டர் நிறுவனத்தின் சர்வதேச தலைமை நிர்வாகி, டிவிட்டர் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் ஆகியோருக்கு இந் 'வக்கீல் நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading கொரோனா தடுப்பு பணிக்கு ஒரு கோடி கொடுக்குமாறு பாஜகவுக்கு வக்கீல் நோட்டீஸ்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை