டெல்லி மாநாட்டில் பங்கேற்பு.. ராமேஸ்வரத்தில் 2 பேருக்கு கொரோனா..

Two of the 17 persons returned to Rameswaram after attending Tablighi Jamaat in Delhi, tested COVID19 positive.

by எஸ். எம். கணபதி, Apr 2, 2020, 11:57 AM IST

தப்லிகி ஜமாத் மாநாட்டில் பங்கேற்று விட்டு ராமேஸ்வரம் திரும்பிய 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

டெல்லி நிஜாமுதீன் பகுதியில் மார்ச் 15ம் தேதி தப்லிகி ஜமாத் அமைப்பின் சார்பில் முஸ்லிம் மதமாநாடு நடைபெற்றிருக்கிறது. இம்மாநாட்டில் தாய்லாந்து, இந்தோனேஷியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த 227 பிரதிநிதிகள் பங்கேற்றிருக்கிறார்கள். சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்ட இம்மாநாட்டில் தாய்லாந்து பிரதிநிதிகள் மூலம் மற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது. இது கடந்த 2 நாட்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, நாடு முழுவதும் பல மாநிலங்களிலிருந்து தப்லிகி ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்களை அடையாளம் கண்டு, தனிமைப்படுத்தி வருகின்றனர். தமிழகத்தில் அதிகபட்சமாக 1131 பேர் டெல்லி மாநாட்டிற்குப் போய் திரும்பியிருக்கிறார்கள். தமிழக அரசு வேண்டுகோளை ஏற்று 1103 பேர் தாமாக மருத்துவப் பரிசோதனைக்கு வந்தனர்.
இந்நிலையில், தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் நேற்று(ஏப்.1) கூறுகையில், டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 1103 பேரில் 658 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் மொத்தம் 190 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மற்றவர்களுக்கு விரைவில் பரிசோதனை செய்யப்படும் என்று கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து, இன்று காலையில் ராமநாதபுரம் மாவட்டக் கலெக்டர் வீரராகவ ராவ் கூறுகையில், ராமேஸ்வரத்திலிருந்து 17 பேர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டிற்குச் சென்று திரும்பியிருந்தனர். அவர்களில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

You'r reading டெல்லி மாநாட்டில் பங்கேற்பு.. ராமேஸ்வரத்தில் 2 பேருக்கு கொரோனா.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை