சென்னையில் கொரோனா ஹெல்மட் அணிந்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஈடுபட்டுள்ளார்.
இந்தியாவில் இது வரை 1965 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. 50 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும், தமிழகத்தில் மக்கள் ஊரடங்கை மீறி சர்வசாதாரணமாக நடமாடி வருகின்றனர். இப்படிச் சுற்றுபவர்களை போலீசார் பல வழிகளில் தண்டனை அளித்து எச்சரித்து வருகிறார்கள். தோப்புக்கரணம் போட வைப்பது, அபராதம் வசூலிப்பது, வாகனங்களைப் பறிமுதல் செய்வது உள்ளிட்டவை அடங்கும்.
இந்நிலையில், சென்னை வில்லிவாக்கம் பகுதியில் ராஜேஷ்பாபு என்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒரு விநோதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கொரோனா வைரஸ் உருவைப் போல் உள்ள ஒரு ஹெல்மட் அணிந்து, கொரோனா வைரஸ் பொம்மைகளைக் கொண்டு மக்களிடம் கொரோனா ஆபத்து குறித்து பிரச்சாரம் செய்கிறார். இது மக்களை மிகவும் கவர்ந்துள்ளது.