சென்னை எண்ணூரில் ராக்கெட் பட்டாசு வெடித்ததில், குப்பைக் கிடங்களில் தீ விபத்து ஏற்பட்டது.கொரோனாவை ஒழிப்பதில் இந்தியர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் மக்கள் வீடுகளில் மின்விளக்குகளை அணைத்து விட்டு, அகல் விளக்கு ஏற்றுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். இதன்படி, நேற்றிரவு விளக்குகள் ஏற்றப்பட்ட போது, சென்னையில் பல இடங்களில் தீபாவளி போல் பட்டாசுகளையும் வெடித்தனர்.
சென்னை எண்ணூரில் வசிக்கும் மக்கள் நேற்றிரவு 9 மணிக்கு விளக்குகளை அணைத்து விட்டு அகல் விளக்கு, மெழுகுவர்த்தி ஏற்றுவதில் ஈடுபட்டனர். அப்போது, சிலர் வானில் சென்று வெடிக்கும் ராக்கெட் பட்டாசுகளை வெடித்தனர். அந்த ராக்கெட் பட்டாசு ஒன்று, எா்ணாவூா் சுனாமி குடியிருப்பு அருகே உள்ள காலி இடத்தில் கீழே விழுந்து தீப்பற்றியது.
தமிழ்நாடு கனிமவள நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த இடத்தில் காய்ந்த சருகுகள், குப்பைகள் புதராகப் படர்ந்திருந்தது. இதனால் உடனே பட்டாசு தீ மூலம் அப்பகுதியில் தீப்பற்றி மளமளவென எரியத் தொடங்கியது.
மேலும் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீயினால் ஏற்பட்ட புகை மண்டலம் சுனாமி குடியிருப்பு பகுதியில் முழுவதுமாக பரவியது. இதனால் சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இச்சம்பவம் குறித்து எண்ணூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.