சென்னை விமான நிலையத்தில் 77வது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால், பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நவீன முறையில் கண்ணாடிகள் பொருத்தி விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டது.
விமான நிலையம் விரிவாக்கம் செய்து மூன்று ஆண்டுகள் ஆன நிலையில், அடுத்தடுத்து கண்ணாடிகள் விழுந்து உடையும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. சில நேரங்களில் மேற்கூரை இடிந்து விழுவதும், கண்ணாடி கதவுகள் உடைந்து விழுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த விபத்துகளில் சிக்கி இதுவரை 10 பயணிகள் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று உள்நாட்டு விமான நிலைய புறப்பாடு பகுதியில் 77 வது முறையாக கண்ணாடி விழுந்து நொறுங்கியது. எனினும் நல்வாய்ப்பாக பயணிகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. கண்ணாடி உடைந்தது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் தொடர்ந்து கண்ணாடி உடைந்து விழுவது பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை விமான நிலையம் போல வேறு எந்த நாட்டு விமான நிலையத்திலும் இது போல மோசமாக விபத்து நிகழவில்லை என பயணி ஒருவர் புலம்பிச் சென்றார்.