தாய்மை புனிதமானது. அதை இயற்கை முறையில் அடைய வேண்டும் என்பதே பெரும்பாலான பெண்களின் ஆசை.
கருப்பையின் உட்சுவர் சீராக (Endometrium) வளர்வதற்கு ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டீரோன் ஹார்மோன்கள் சீராகச் சுரக்க வேண்டும். கருப்பையின் உட்சுவர் மெலிதாக (homogeneous) இருந்தால், அது படிப்படியாக அதிகரித்து 10 மி.மீ. முதல் 12 மி.மீ. வரை வளர்வது கருவுறுதலுக்குச் சிறந்தது. ஸ்கேனில் heterogeneous அல்லது Triple layer எனக் குறிப்பிடும் வளர்ச்சி கருவுறுவதற்கு வசதியாக அமையும்.
உளுந்து
கருப்பை உட்சுவரின் சீரான வளர்ச்சிக்குப் பெண்களுக்கு இயற்கையின் கொடையாகக் கிடைக்கும் மூலிகைகளில் உளுந்து, கற்றாழை, சதாவேரி ஆகியவற்றின் பங்களிப்பு இன்றியமையாதது.
உளுந்தில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன் சத்து இருப்பதை அறிந்தே தென்னிந்தியாவில் மரபு உணவாக நமது முன்னோர்கள் உளுத்தங் கஞ்சியை வைத்திருந்தார்கள். பெண்கள் பூப்பு எய்தியவுடன் வழங்கப்படும் முதல் உணவு இது. மாதவிடாயின் முதல் 15 நாட்களுக்குக் காலை உணவாகத் தொடர்ச்சியாக உண்டுவருவது பலனளிக்கும்.
ஆலம் விழுது பால் கசாயம்
செய்முறை:
ஆலம் விழுது 50 கிராம், 200 மி.லி. பால், 200 மி.லி. தண்ணீர் ஆகியவற்றை 100 மி.லியாக சுண்டும்வரை காய்ச்சி, பின் வடிகட்டி கொஞ்சம் கருப்பட்டி சேர்த்துத் தேநீராக காலை மாலை இரு வேளையும் அருந்தலாம் (காபி, டீக்குப் பதிலாக).
பழங்களில் அத்தி, மாதுளை, கருப்பு திராட்சை விதையுடன் (proanthocyanidin சத்துக்காக) சாப்பிடவும்.
கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை முறை
* உடல், உழைப்பு, வசிப்பிடம், காலத்துக்கேற்ற உணவை விருப்பத்துடன் உண்ணுங்கள், சமச்சீரான உணவை நேசியுங்கள்.
* குறைந்தது 45 நிமிட நடைப்பயிற்சி அல்லது திறந்த வெளி விளையாட்டு உடலுக்கும் மனதுக்கும் சுகமளிக்கும்
* எளிய யோகாப் பயிற்சிகள்.
* மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ளவும். ஹார்மோன் செயல்பாடுகளை மன உளைச்சல் பாதிக்கும். சித்த மருத்துவ சிகிச்சை
* முறையான சித்த மருத்துவர் ஆலோசனையுடன் கற்றாழையால் செய்யப்படும் குமரி லேகியம், குமரி பக்குவத்தை உண்டுவரலாம்.
* மூலிகைகளின் அரசி என்று அழைக்கப்படும் சதாவேரி லேகியம். ஆல விதைப் பொடியுடன் அயச்செந்தூரம் தேனில் கலந்து உண்ணலாம்.
* மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே இம்மருந்துகளை உண்ண வேண்டும்.
* இலந்தை இலை சுத்தம் செய்தது ஒரு கைப்பிடி, பூண்டு ஐந்து, மிளகு மூன்று ஆகியவற்றை நீர் விட்டு அரைத்து மோரில் கலந்து குடிப்பது நல்லது (மாதவிடாய் நாட்களில் இரு வேளை).
* இவற்றில் தங்களுக்கு ஏற்ற மருந்துகளை, மருத்துவர் ஆலோசனையுடன் தொடரவும்.