தமிழகத்தில் 10 வயதுக்கு உட்பட்ட 31 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டது. இதில் 91 பேர், டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது. 4 பேர் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் 4 பேர். கொரோனாவுக்கு இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். 58 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 10 வயதுக்கு உட்பட்ட 31 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையைச் சேர்ந்த டாக்டருக்கு ஆந்திராவில் இருக்கும் போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அவரது உடலை அம்பத்தூர் மின் மயானத்தில் தகனம் செய்வதில் பிரச்சனை ஏற்பட்டு, அதை உடனடியாக மாநகராட்சி கமிஷனர் மூலம் சமாளித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோல் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதில் பிரச்சனை வராமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நாம் 4 லட்சம் துரிதப் பரிசோதனை கருவிகள் (ரேபிட் டெஸ்டிங் கிட்) வாங்குவதற்கு ஆர்டர் செய்திருந்தோம். தற்போது அவை வந்து சேர தாமதமாகிறது. அதற்காக நாம் காத்திருக்கவில்லை. கொரோனா பாதிப்பு அறிகுறி உள்ளவர்கள், அதிக மூச்சுத்திணறலால் பாதிக்கப்படுவோர், கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனைகளையே செய்து வருகிறோம்.
கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.