தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக ஒரு லட்சத்து 94,995 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2 லட்சம் பேர் கைதாகி ஜாமீனில் விடப்பட்டனர்.
தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுப்பதற்காக கடந்த மாதம் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் ஊரடங்கு விதிகளை மீறி சுற்றியவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர்கள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடப்பட்டனர்.
கடந்த மார்ச் 24-ம் தேதி தொடங்கி இன்று(ஏப்.16) காலை 11 மணி வரை மொத்தம் 1 லட்சத்து 94,995 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2 லட்சத்து 8,139 பேரை போலீசார் கைது செய்து விடுதலை செய்துள்ளனா்.ஊரடங்கு உத்தரவை மீறி வந்தவா்களின் 1 லட்சத்து 79,827 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளிலும் சிக்கியவா்களிடம் இருந்து ரூ.89 லட்சத்து 23,644 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை இன்று முதல் திரும்ப ஒப்படைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், விதிகளை மீறுபவா்கள் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கவும், அவா்களது வாகனங்களைப் பறிமுதல் செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனா்.