தமிழகத்தில் ஊரடங்கை மீறியதற்காக இரண்டரை லட்சம் பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் மிகவும் கட்டுப்பாடாக இருந்த மக்கள் கடந்த சில நாட்களாகச் சர்வசாதாரணமாக வாகனங்களில் செல்வதும், கூட்டம் கூடுவதுமாக உள்ளனர்.இதனால், போலீசார் மீண்டும் எல்லா இடங்களிலும் வாகனங்களை மறித்துத் திருப்பி அனுப்புகின்றனர். அப்படியும் ஊர் சுற்றும் இளைஞர்களிடம் வாகனங்களைப் பறிமுதல் செய்வதுடன், அபராதமும் விதிக்கின்றனர்.
இது வரை பதிவு செய்யப்பட்ட வழக்குகள் பற்றி தமிழக டி.ஜி.பி. அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:இன்று(ஏப்.20) காலை வரை தமிழகத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 2 லட்சத்து 50,230 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 2 லட்சத்து 35,164 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது வரை 2 லட்சத்து 11,467 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், விதிகளை மீறியவர்களிடம் இருந்து அபராதமாக மொத்தம் ஒரு கோடியே 26 லட்சத்து 31,894 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு காவல் துறை தெரிவித்துள்ளது.