கொரோனாவால் அதிகமான உயிரிழப்புகளைச் சந்தித்துள்ள அமெரிக்காவில் ஒரு நாளிதழில் 15 பக்கங்களுக்கு காலமானார் விளம்பரங்கள் வெளிவந்திருக்கிறது.
சீனாவின் உகான் மாநகரில் தோன்றிய கொரோனா வைரஸ்(கோவிட்19), உலகையே அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்காவில்தான் அதிகமான பாதிப்பு. இந்த நாட்டில் அதிகபட்சமாக 7 லட்சத்து 64 ஆயிரம் பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இவர்களில் இந்நோய்க்கு 40,565 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், மாசேசூசெட்ஸ் மாகாணத்தில் பாஸ்டன் குளோப் என்ற பிரபலமான நாளிதழ் வெளிவருகிறது. இந்த நாளிதழில் ஞாயிறு(ஏப்.19) இதழில் 15 பக்கங்களுக்குக் காலமானார் விளம்பரச் செய்திகள் வெளிவந்துள்ளன. கொரோனால் அதிகமானோர் உயிரிழந்திருப்பதை இந்த விளம்பரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. வழக்கமாக, ஒரு பக்கத்தில்தான் மரணம் தொடர்பான விளம்பரங்கள் மற்றும் காலமானார் செய்திகள் இடம்பெறும்.
இப்போது ஒரே நாளில் 15 பக்கங்களுக்கு இந்த துக்கச் செய்தி மற்றும் விளம்பரங்கள் வந்திருப்பது அதிர்ச்சியைத் தந்துள்ளது. மாசேசூசெட்ஸ் மாகாணத்தில் இது வரை 38 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இவர்களில் 1,700 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.