தமிழகத்திலும் கொரோனா துரிதப் பரிசோதனை(ரேபிட் டெஸ்டிங்) நிறுத்தப்பட்டுள்ளது.
சீனாவில் தோன்றிய ஆட்கொல்லி நோய் கொரோனா இப்போது உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவில் இன்று(ஏப்.22) காலை நிலவரப்படி 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இதற்கிடையே, ஒருவருக்கு கொரோனா எதிர்ப்புச் சக்தி உள்ளதா என்பதை 30 நிமிடத்தில் கண்டுபிடிக்கும் துரித பரிசோதனை கருவிகள்(ரேபிட் டெஸ்டிங் கிட்ஸ்) சீனாவிலிருந்து வாங்கப்பட்டன. சீனாவில் உள்ள 3 கம்பெனிகளில் இருந்து 3 லட்சம் கருவிகள் வாங்கப்பட்டன. இந்த கருவிகளைக் கொண்டு ராஜஸ்தானில் மக்களுக்குப் பரிசோதனை செய்த போது, தவறான முடிவுகள் தெரிய வந்தன. பிசிஆர் டெஸ்டில் கொரோனா பாசிட்டிவ் கண்டறியப்பட்டவர்களுக்கு ரேபிட் டெஸ்டில் தவறாக முடிவு வந்திருக்கிறது. இதையடுத்து, ராஜஸ்தானில் ரேபிட் டெஸ்டிங் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, ரேபிட் டெஸ்டிங் முறையைப் பயன்படுத்துவதை நிறுத்தி வைக்குமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியது.
இதையடுத்து, மகாராஷ்டிரா, மேற்குவங்கம், குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், கர்நாடகா, அசாம், அரியானா மாநிலங்களில் இந்த ரேபிட் டெஸ்டிங் நிறுத்தப்பட்டது. தமிழகத்திலும் இந்த பரிசோதனை நேற்று முதல் நிறுத்தப்பட்டது. தமிழகத்திற்குச் சீனாவிலிருந்து 24 ஆயிரம் ரேபிட் டெஸ்டிங் கருவிகளும், மத்திய அரசிடம் இருந்து 12 ஆயிரம் கருவிகளும் வந்திருந்தன.