கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டவர்கள் இறந்தால், அவர்களின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.சென்னையில் கடந்த 2 நாள் முன்பாக கொரோனா பாதித்து உயிரிழந்த டாக்டர் சைமன் உடலை அடக்கம் செய்யக் கொண்டு சென்றவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடைபெற்றது.
இந்நிலையில் டாக்டரின் மனைவி மற்றும் மகனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார். இதன்பின்பு அவர் வெளியிட்ட அறிவிப்பில், கொரோனா தடுப்பு பணியில் உள்ள மருத்துவப் பணியாளர்கள், காவல்துறையினர், உள்ளாட்சி மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்பட எந்த துறை பணியாளர்களும் கொரோனா பாதித்து உயிரிழக்க நேரிட்டால் அவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி என்று ஏற்கனவே அறிவித்திருந்ததை ரூ.50 லட்சமாக உயர்த்தியுள்ளதாகத் தெரிவித்திருக்கிறார்.
மேலும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழப்பவர்களின் உடல் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு விருது வழங்கப்படும். சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகளைத் தீவிரப்படுத்தக் கூடுதலாக 2 அதிகாரிகள் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.