தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறி, வாகனங்களில் சுற்றியவர்களிடம் ரூ.3 கோடியே 27 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.நாடு முழுவதும் கொரோனா பரவாமல் தடுப்பதற்காக மே 3ம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் ஊரடங்கை மீறி மக்கள் வாகனங்களில் செல்வதும், கூட்டம் கூடுவதும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. குறிப்பாக, சென்னை, சேலம் உள்பட 5 மாநகராட்சிகளில் இன்று(ஏப்.26) அதிகாலை 6 மணி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் அவசர காரணமின்றி வெளியே சுற்றுபவர்களிடம் காவல்துறையினர் வாகனங்களைப் பறிமுதல் செய்வதுடன், அபராதமும் விதிக்கின்றனர்.
இது வரை பதிவு செய்யப்பட்ட வழக்குகள் பற்றி தமிழக டி.ஜி.பி. அலுவலகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:இன்று(ஏப்.26) காலை வரை தமிழகத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 3 லட்சத்து 24,269 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 3 லட்சத்து 6339 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2 லட்சத்து 76,183 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், விதிகளை மீறியவர்களிடம் இருந்து அபராதமாக மொத்தம் 3 கோடியே 27 லட்சத்து 33,714 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு காவல் துறை தெரிவித்துள்ளது.