மக்களின் உயிரோடு விளையாடாதீர்கள்.. அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை..

M.K.Stalin condemns tamilnadu govt. for lethargic action on covid19.

by எஸ். எம். கணபதி, Apr 27, 2020, 14:16 PM IST

அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் நோயாளிகளை நெருங்கவே அஞ்சும் நிலைக்கு டாக்டர்களை தள்ளியது ஏன் எனத் தமிழக அரசு, நாட்டு மக்களுக்குப் பதில் சொல்லவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.கொரோனா தடுப்பு பணி மற்றும் நிவாரணப் பணிகளில் தமிழக அரசு அலட்சியமாகச் செயல்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். ஆனால், அவர் அரசியல் செய்வதாக முதல்வரும், அமைச்சர்களும் கூறி வருகின்றனர்.


இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட மாநகரங்களில் 4 நாட்கள் முழுமையான ஊரடங்கு என்று எவ்வித முன் தயாரிப்புகளும் இல்லாமல், திடீரென தமிழக அரசு அறிவித்தது, இதனால் பொதுமக்கள் 4 நாட்களுக்கு என்ன செய்வது என்ற பதற்றத்திலும், அவசரத்திலும் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காகக் கூட்டம் கூட்டமாக வெளியே வந்தனர். அதனால் எங்கும் நெரிசல் ஏற்பட்டு, இத்தனை நாளும் மக்கள் காத்து வந்த சமூக ஒழுங்கு பாதிக்கப்பட்டு, நோய்த்தொற்று பரவல் குறித்த சந்தேகம் அனைத்து தரப்பிலும் அதிகரித்துள்ளது என்பது வேதனைக்குரிய செய்தியாகும்.
பேரிடர் காலத்திலும்கூட, எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதேச்சதிகார பாணியில், எந்த ஆலோசனையையும் பொருட்படுத்தாமல், எல்லாவற்றையும் விளம்பரமாகக் கருதி, தன் பெயரை முன்னிறுத்திக் கொள்ள முயற்சிக்கும் மலிவான அரசியல் நோக்கத்தைத்தான் அவரது நடவடிக்கை காட்டுகிறது. கடைகளில் பெருங்கூட்டம் கூடியதால், இந்த ஊரடங்கின் நோக்கமே சிதைந்து சின்னாபின்னமாகும் சூழல் உருவாகி விட்டது.

இதுகுறித்தெல்லாம் முறையாக ஆலோசித்து முடிவெடுத்து வெளிப்படையாக அறிவித்திருந்தால், மக்களும் சமூக ஒழுங்கைக் கடைப்பிடித்து தங்களுக்குத் தேவையான பொருட்களை எவ்வித நெரிசலுமின்றி, பொறுமையாக வாங்கிச் சென்றிருக்க முடியும். பொதுமக்களின் உயிருடன் விளையாடும் வகையில், அவசர கோலத்தில் அள்ளித் தெளித்தது போன்ற நடவடிக்கையால், நோய்த்தொற்று பரவல் குறித்த ஐயப்பாடும் பயமும் மேலும் அதிகரித்துள்ளது.கொரோனா தொற்று அறிகுறிகளுடன், மூச்சுத் திணறல் காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு சிகிச்சையாக்க வேண்டிய மருத்துவர்களுக்குத் தற்காப்பு உடை அரசு தரப்பிலிருந்து தரப்படாததால், உடனடியாக சிகிச்சையைத் தொடங்க முடியாமல், மூத்த மருத்துவர்கள் உள்பட பத்துக்கும் மேற்பட்ட முதுநிலை மாணவர்களின் கண்ணெதிரே அந்த இளைஞர், எந்த சிகிச்சையும் கிடைக்கப் பெறாமல் துடிதுடித்து இறந்துபோனார் என்ற செய்தி வந்துள்ளது. அலட்சியத்தால் இப்பேரிடர் காலத்தில், மருத்துவத்துறைக்கான போதிய அடிப்படை வசதிகளின்றி ஓர் உயிரைப் பலியிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

தலைநகர் சென்னையின் முதன்மை மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களின் நிலையே இத்தனை பரிதாபகரம் எனில், தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களின் நிலையைக் கேட்கவே வேண்டாம்; அதை நினைக்கவே நெஞ்சம் நடுங்குகிறது. அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் நோயாளிகளை நெருங்கவே அஞ்சும் நிலைக்கு டாக்டர்களை தள்ளியது ஏன் எனத் தமிழக அரசு, நாட்டு மக்களுக்குப் பதில் சொல்லவேண்டும்.இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியிலும், அர்ப்பணிப்போடு பணியாற்றும் சுகாதார ஊழியர்களை நெஞ்சாரப் பாராட்டுவதோடு, அவர்களைப் பாதுகாக்கும் கடமை தலையாயது என்பதை அரசுக்குச் சுட்டிக்காட்ட விழைகிறேன்.ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கல்லூரிகளில் பல மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். தற்போதைய நோய்த்தொற்று சூழலில், அந்தந்த மாநில அரசுகளும் ராஜஸ்தானில் உள்ள தங்கள் மாணவர்களைப் பாதுகாப்பாகச் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்வதில் அக்கறை காட்டி வருகின்றன. அங்குத் தவிக்கும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு, இதுவரை தமிழக அரசிடமிருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை. அ.தி.மு.க. அரசு உடனடியாக அந்த மாணவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கான பாதுகாப்புடன் கூடிய பயணத்திற்கு ஏற்பாடு செய்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

பேரிடர் காலத்தில் பொதுமக்களின் நலன் காப்பதுதான் முக்கியமே தவிர, அதையே ஒரு வாய்ப்பாகக் கருதி, வெற்று விளம்பர அரசியல் செய்வது, இறுதியில் எந்தப் பயனையும் தராது என்பதை ஆட்சியாளர்கள் நினைவில்கொண்டு, விளம்பர வெளிச்சத்திற்காக ஏங்கி, மக்களின் உயிரோடு விளையாடும் விபரீதப் போக்கை இப்போதாவது நிறுத்திக் கொண்டு, முன்யோசனை நிறைந்த விவேகத்துடன் விரைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You'r reading மக்களின் உயிரோடு விளையாடாதீர்கள்.. அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை