தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலும் சென்னையில் மட்டும் 138 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவிலும் அதிகமாகப் பரவியிருக்கிறது. தமிழகத்தில் தற்போது 2 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பரவி விட்டது.
தமிழகம் முழுவதும் நேற்று(ஏப்.30) ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2323 ஆக உயர்ந்தது. தமிழக அரசு நேற்று மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, புதிதாகப் பாதித்தவர்களில் 97 பேர் ஆண்கள், 64 பேர் பெண்கள் ஆவர். இன்று மட்டும் 9643 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மொத்தத்தில் ஒரு லட்சத்து 10,718 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 48 பேரையும் சேர்த்து இது வரை 1258 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா பரவலில் சென்னை மிகவும் மோசமாகப் போய்க் கொண்டிருக்கிறது. இன்று மட்டும் புதிதாக 138 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சென்னையில் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 906 ஆனது. இது தவிரச் செங்கல்பட்டில் புதிதாக 5 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 3 பேருக்கும், மதுரையில் 5 பேருக்கும், ராமநாதபுரத்தில் 3 பேருக்கும், பெரம்பலூரில் 2 பேருக்கும், கடலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூரில் தலா ஒருவருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது.
கோவையில் 141, திருப்பூர் 112, திண்டுக்கல் 80, ஈரோடு 70, நெல்லை 63, நாமக்கல் 59, செங்கல்பட்டு 63, தஞ்சை 55, திருவள்ளூர் 54, திருச்சி 51 பேர் என்று கொரோனா பாதித்துள்ளது.