தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 2757 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 1257 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. தமிழகம் முழுவதும் நேற்றும்(மே2) 231 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2757 ஆக உயர்ந்துள்ளது. தமிழக அரசு நேற்று மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, புதிதாக பாதித்த 231 பேரில் 158 ஆண்கள், 72 பெண்கள் மற்றும் ஒருவர் திருநங்கை ஆவார்.
கொரோனா பரிசோதனை எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 10,049 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மொத்தத்தில் ஒரு லட்சத்து 30,132 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 29 பேரையும் சேர்த்து இது வரை 1341 பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் கோயம்பேடு சந்தையில் கடந்த 25ம் தேதி ஒரு நாள் கூடிய பெருங்கூட்டத்தால் அங்கிருந்து கொரோனா வைரஸ் பல மாவட்டங்களுக்கும் பரவிக் கொண்டிருக்கிறது. சென்னையில் நேற்று மட்டும் புதிதாக 174 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சென்னையில் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 1257 ஆனது. இது தவிர செங்கல்பட்டில் புதிதாக 5 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 13 பேருக்கும், அரியலூரில் 18 பேருக்கும், திருவள்ளூரில் 7 பேருக்கும், கடலூர், பெரம்பலூர், ராமநாதபுரம், கோவை, மதுரை, சேலம் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது.