காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்கட்சிகளின் கோரிக்கை குறித்த கேள்விக்கு, தலைமை உத்தரவிட்டால் ராஜினாமா செய்வோம் என்று தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி இறுதி தீர்ப்பில் உத்தரவிட்டு இருந்தது. ஆனால் மத்திய அரசு இதுவரை இதில் தனது நிலையை வெளிப்படையாக கூறவில்லை.
மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, ‘அது சாத்தியமில்லை’ என்கிற ரீதியில் கருத்து கூறினார். ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகா அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் வருவதால் பாஜக கர்நாடகாவிற்கு ஆதரவாகவே செயல்படும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில், இன்று கூடிய நாடாளுமன்றக் கூட்டத்தின் இரு அவைகளிலும் காவிரி பிரச்னையை தமிழ்நாடு எம்.பி.க்கள் எழுப்பினர். பின்னர் அவை ஒத்தி வைக்கப்பட்டதும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, பிரதமர் நரேந்திர மோடியை 10 நிமிடங்கள் சந்தித்து பேசினார்.
பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இரு அவைகளிலும் அதிமுக எம்.பி.க்கள் இன்று அவைத்தலைவரை முற்றுகையிட்டனர். எனவே அவை ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதுதான் அம்மாவின் கொள்கை. அவரால் உருவாக்கப்பட்ட நாங்கள் அதற்காக தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்துவோம் என தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். பிரதமரை சந்தித்தபோது 3 மாநில தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தேன்’ என்றார் தம்பிதுரை.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை வைத்திருக்கிறார்களே? எனக் கேட்டபோது, ‘அரசியலுக்காக அவர்கள் இந்த கோரிக்கையை வைக்கிறார்கள். நாங்கள் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம். எங்கள் தலைமை உத்தரவிட்டால், ராஜினாமா செய்வோம்’ என்று தெரிவித்துள்ளார்.