முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை, மாரடைப்பால் இன்று காலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 74.செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகாவில் உள்ள இரும்பேடு கிராமத்தில் 1945ம் ஆண்டில் ஜூன் 24ம் தேதி பிறந்தவர் தலித் எழில்மலை. ராணுவத்தில் பணியாற்றிய தலித் எழில்மலை ஓய்வு பெற்ற பின்பு, கடந்த 1990ம் ஆண்டில் பா.ம.க.வில் சேர்ந்து பொதுச் செயலாளராக பணியாற்றினார்.1998ம் ஆண்டு மக்களவை தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர் மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சராகப் பொறுப்பேற்றார். ஓராண்டு இந்த பதவியிலிருந்தார்.
பின்னர், அவர் டாக்டர் ராமதாசுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பாமகவை விட்டு விலகினார். அதிமுகவில் இணைந்த அவருக்கு 2004ம் ஆண்டு தேர்தலில் திருச்சி மக்களவை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தார் ஜெயலலிதா. அந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் எம்.பி.யாக பதவி வகித்தார். சில ஆண்டுகளுக்குப் பின் தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார்.
சென்னை மாடம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் அவர் வசித்து வந்தார். உடல்நலக்குறைவால் சில நாட்களாக அவதிப்பட்ட தலித் எழில்மலைக்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு, காலமானார். அவருக்கு முனிரத்னம் என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் 3 மகள்கள் உள்ளனர்.