கொரோனாவுக்கு தடுப்பு மருந்துகளாக 30 வகையான மருந்துகளை ஆய்வு செய்து வருவதாகவும், விரைவில் சரியான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் என்றும் மருத்துவ விஞ்ஞானிகள், பிரதமர் மோடியிடம் உறுதி அளித்துள்ளனர்.சீனாவின் உகான் நகரில் தோன்றி உலகை ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ் நோய்க்கு இது வரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. நோய் சிகிச்சைக்கான மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நோய் பரவாமல் தடுப்பதற்காக பல்வேறு நாடுகளும் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் மும்முரமாக உள்ளன. இந்தியாவிலும் மருத்துவ விஞ்ஞானிகள் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கொரோனா தடுப்பு சிறப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தைப் பிரதமர் மோடி நேற்று டெல்லியில் நடத்தினார். இதில், மருத்துவ நிபுணர்கள், மருந்து கம்பெனி ஆய்வாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். கூட்டத்திற்குப் பின், மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், தற்போதைய நிலையில் கொரோனாவுக்கு தடுப்பு மருந்துகளாக 30 வகையான மருந்துகளை ஆய்வு செய்து வருவதாகவும், விரைவில் சரியான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் என்றும் மருத்துவ விஞ்ஞானிகள், பிரதமர் மோடியிடம் உறுதி அளித்துள்ளனர். 30 மருந்துகளின் ஆய்வுகளும் பல்வேறு நிலைகளில் உள்ளன. சில புதிய மருந்துகள் பரிசோதித்துப் பார்க்கும் நிலைக்கு வந்துள்ளன என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.தற்போது அளிக்கப்படும் மருந்துகளை எப்படி மாற்றியமைப்பது, புதிதாக என்ன வகையான மருந்துகளைப் பயன்படுத்தலாம் என்ற ஆய்வுகளும் தொடர்ந்து நடைபெறுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.