தமிழக அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயது 58ல் இருந்து 59 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடுமையான நிதிநெருக்கடியால் அரசு இந்த முடிவெடுத்திருக்கிறது.தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், மே 17ம் தேதி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழக அரசு ஜிஎஸ்டி வரி வசூல், மதுபான கலால் வரி, மதுபான விற்பனை வருவாய், பத்திரப்பதிவு வருவாய் என்று முக்கிய வருவாய் எல்லாமே முடங்கிப் போனது.
இதையடுத்து, அதிமுக அரசு கடன் விற்பனைப் பத்திரங்கள் வெளியிட்டு அதன் மூலம் 5 ஆயிரம் கோடி வரை நிதி திரட்டியது. ஆனால், மத்திய பாஜக அரசு, தமிழகத்தின் மீது அதீத வெறுப்பு கொண்டதோ என்னவோ தெரியவில்லை. தமிழகத்திற்குத் தர வேண்டிய ரூ.16 ஆயிரம் கோடியில் பத்து சதவீதத்தைக் கூட தர மறுக்கிறது. இதனால், தமிழக அரசு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடும் நிதிநெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.
இந்த சூழ்நிலையில், இந்த ஆண்டு ஓய்வு பெறவிருக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு பணிக்கொடை(கிராஜுவிட்டி) உள்ளிட்ட பணத்தைக் கொடுப்பதற்கு அரசுக்கு 2700 கோடிகள் தேவைப்படுகிறது. மேலும், இந்த ஆண்டு ஓய்வு பெறுபவர்களுக்கும் அடுத்த மாதம் முதல் ஓய்வூதியம் தர வேண்டியுள்ளதால், ஓய்வூதியத் தொகையின் அளவும் 2300 கோடி கூடுதலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, இந்த ஆண்டு யாரையும் ஓய்வு பெற விடாமல் தடுப்பதற்காகத் தமிழக அரசு ஒரு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு அரசின் பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது 58ல் இருந்து 59 ஆக உயர்த்தி முதல்வர் ஆணையிட்டுள்ளார். இந்த ஆணை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த ஆணை உடனடியாக அமலுக்கு வரும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.