2020-2022ம் ஆண்டுக்கான தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தனி அதிகாரி கே.கே. மஞ்சுளா மற்றும் தேர்தல் அதிகாரி, நீதியரசர் எம். ஜெயச்சந்திரன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020 -2022 ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான அட்டவணை கடந்த ஏப்ரல் மாதம் 16ம் தேதி அன்று வெளியிடப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் குறிப்பாகச் சென்னையில் கொரோனா வைரஸ் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருவதைக் கருத்தில் கொண்டும் மேலும் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் நடத்தக் கால அவகாசம் வேண்டித் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாலும் மேற்படி சங்கத்தின் தேர்தலை ஏற்கனவே அறிவித்த தேதியில் நடத்த இயலாத சூழ்நிலை இருக்கின்ற காரணத்தால் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் திருத்தப்பட்ட தேர்தல் அட்டவணை வரவிருக்கும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பின்னர் அறிவிக்கப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் போட்டியிட ஏற்கனவே தயாரிப்பாளர்கள் டி.சிவா, என்.முரளி ராமநராயணன் ஆகியோர் தலைமையில் இரண்டு அணிகள் அமைக்கப்பட்டன. இரண்டு அணிகள் மட்டுமே போட்டியிட வேண்டும் அல்லது போட்டியின்றி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட வேண்டும் என டைரக்டர் பாரதிராஜா ஒரு கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அது ஏற்கப்படாமல் போட்டி உருவாகியிருக்கிறது. மற்றொரு அணியும் போட்டியில் பங்கேற்கும் என்று கூறப்படுகிறது.முன்னதாக வரும் ஜூன் 21ம் தேதி தேர்தல் நடக்கும். 11ம் தேதி முதல் 14-ம் தேதி வரை மனுக்கள் சங்க அலுவலகத்தில் வழங்கப்படும். மே 15-ம்தேதி முதல் 19-ம் தேதி வரை வேட்பு மனுக்களைச் சங்க அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப் பட்டிருந்தது நினைவிருக்கலாம்