தமிழகம் முழுவதும் திமுகவினர் கருப்பு உடையணிந்து கருப்புக் கொடி ஏந்தி, டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர்.தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு மே 17ம்தேதி வரை நீடிக்கிறது. இதற்கிடையே, சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் இன்று(மே7) முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படுகின்றன.
இதற்கிடையே, மதுபானக் கடைகள் திறப்பதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், டாஸ்மாக் கடை திறப்பதற்குத் தடை விதிக்கப்படவில்லை.
இந்த நிலையில், தமிழகத்தில் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் இன்று காலையில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன.
டாஸ்மாக் கடை திறப்புக்குக் கண்டனம் தெரிவித்து தி.மு.க. கூட்டணி சார்பில் இன்று கருப்புக் கொடியுடன் அவரவர் வீடுகளிலேயே தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருப்பு சட்டை அணிந்து கருப்பு கொடியுடன் போராட்டம் நடத்தினார்.சென்னை ஆழ்வார்பேட்டையில் தனது வீட்டுக் காம்பவுண்டுக்குள் அவர் குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டார். ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் கருப்பு ஆடை அணிந்து கருப்பு கொடிகளுடன் நின்றனர். எடப்பாடி பழனிசாமி அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
முன்னதாக, ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் நோய்த்தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது மதுக்கடைகளைத் திறந்து, சமூகத்தின், குடும்பங்களின் அமைதியைக் குலைக்கத் தயாராகும் குடியைக்கெடுக்கும் அதிமுக அரசுக்கு நம் எதிர்ப்பைக் காட்டுவோம்.
கொரோனாவை ஒழிப்பதில் தோல்வி அடைந்துவிட்ட அ.தி.மு.க. அரசைக் கண்டிக்கிறோம் என முழங்குவோம்! என்று குறிப்பிட்டிருந்தார்.தமிழகம் முழுவதும் திமுக கூட்டணியினர் தங்கள் வீடுகள் மற்றும் கட்சி அலுவலகங்களில் கருப்பு கொடியுடன் டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர்.