டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு அப்பீல் செய்யக் கூடாது என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.தமிழகத்தில் சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் மே 7ம் தேதி முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன.இதற்கிடையே, மதுபானக் கடைகள் திறப்பதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ராம்குமார் ஆதித்தன் என்பவர் உள்படப் பலரும் பொதுநலன் மனுக்களைத் தாக்கல் செய்தனர். இவற்றை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் நேற்று வீடியோகான்பரன்ஸ் மூலம் விசாரித்தனர்.
இதையடுத்து, மதுபானக் கடைகளைத் திறக்க அனுமதி அளித்த நீதிபதிகள், பல்வேறு நிபந்தனைகளை விதித்தனர். இந்நிலையில், வழக்கறிஞர் ராஜேஷ் மற்றும் மக்கள் நீதி மய்யம் மீண்டும் ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில், கடந்த 2 நாட்களாக டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டதில், எந்த கட்டுப்பாடுகளும் பின்பற்றப்படவில்லை. சமூக இடைவெளி இல்லாமல் கூட்டம் அலைமோதியதால், கொரோனா தொற்று மேலும் பரவும் அபாயம் உள்ளது. அதனால், மதுக்கடைகளை மூடுவதற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இதை விசாரித்த நீதிபதிகள், நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளை மீறியதால், டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட உத்தரவிடுகிறோம். ஊரடங்கு அமலில் இருக்கும் வரை மதுக்கடைகளைத் திறக்கக் கூடாது. ஆன்லைன் மூலமாக மட்டுமே மது விற்பனை செய்ய அனுமதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரவேற்றுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், டாஸ்மாக் மதுபானக் கடைகளை உடனடியாக மூடுவதற்கு உத்தரவிட்ட சென்னை ஐகோர்ட் தீர்ப்பை வரவேற்கிறேன். இந்த தீர்ப்பு தமிழ்நாட்டு பெண்களுக்கும், மக்களுக்கும் கிடைத்த வெற்றியாகும். இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.