மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 19 ஆயிரம் தாண்டியது.. தமிழகம் 4வது இடத்தில்..

India reports 3,320 new Covid-19 cases, 95 deaths in 24 hours.

by எஸ். எம். கணபதி, May 9, 2020, 11:23 AM IST

இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 59,662 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக, மகாராஷ்டிராவில் பாதிப்பு 19 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
சீன வைரஸ் கொரோனா, இந்தியாவில் பரவும் வேகம் இன்னும் கட்டுப்படவில்லை. பிரதமர் அமைத்த நிபுணர்குழு, மே முதல் வாரத்தில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கும் என்று ஏற்கனவே கூறியிருந்தது. ஆனால், இன்னும் கூடிக் கொண்டேதான் இருக்கிறது. தினமும் புதிதாக மூவாயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று(மே 8) காலை வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் இது வரை மொத்தம் 59,662 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 95 பேரையும் சேர்த்து 17,846 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் இது வரை பலியானவர்களின் எண்ணிக்கை 1981 ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் நேற்று மட்டும் புதிதாக 3320பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. அதே போல், நேற்று மட்டும் கொரோனா பாதித்த 95 பேர் பலியாகியுள்ளனர்.

மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி மாநிலங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மகாராஷ்டிராவில் இது வரை 19,003 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. 731 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.
குஜராத்தில் 7421 பேருக்கு கொரோனா பரவிய நிலையில், 449 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் 6318 பேர் கொரோனா பாதித்துள்ள நிலையில், 68 பேர் பலியாகியுள்ளனர்.
தமிழகத்தில் 6009 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 40 பேர் இந்நோயால் பலியாகியுள்ளனர்.

You'r reading மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 19 ஆயிரம் தாண்டியது.. தமிழகம் 4வது இடத்தில்.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை