துபாயிலிருந்து சென்னைக்கு 2 சிறப்பு விமானங்களில் 359 பேர் திரும்பியுள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா பரவியிருப்பதால், பல நாடுகளில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வெளிநாடுகளில் வேலையிழந்து தவிக்கும் இந்தியர்களைத் திருப்பி அழைக்க வந்தே பாரத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது.
இந்த உதவியைப் பயன்படுத்தி நாடு திரும்புவதற்கு 67,833 இந்தியர்கள், மத்திய அரசிடம் விண்ணப்பித்தனர். அவர்களில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் 25,246 பேர், தமிழ்நாடு 6,617, மகாராஷ்டிரா 4341, உ.பி. 3715, ராஜஸ்தான் 3320, ஆந்திரா 2445, தெலங்கானா 2796, கர்நாடகா 2786, குஜராத் 2330, டெல்லி 2232 பேர் என்று பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பிருந்தே சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன. முதலில், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளாவுக்குச் சிறப்பு விமானங்கள் மூலம் பலர் நாடு திரும்பினர். இன்று காலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயிலிருந்து சென்னைக்கு 2 சிறப்பு விமானங்கள் வந்தன. ஒன்றில் 177 பேரும், இன்னொரு விமானத்தில் 182 பேரும் நாடு திரும்பினர்.
அடுத்ததாக, வங்கதேசம் டாக்காவிலிருந்து டெல்லிக்கு இன்று மாலை 3 மணிக்கு ஒரு சிறப்பு விமானம் வந்து சேருகிறது. அதே போல், குவைத்-ஐதராபாத் மாலை 6.30, ஓமன்-கொச்சின் இரவு 8.50, சார்ஜா-லக்னோ இரவு 8.55, குவைத்-சென்னை, கோலாலம்பூர்-திருச்சி, லண்டன்-மும்பை என்று தொடர்ச்சியாகச் சிறப்பு விமானங்களில் இந்தியர்கள் நாடு திரும்புகிறார்கள். வளைகுடா நாடுகளில் வருபவர்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் வரையிலும், லண்டனிலிருந்து வருவோருக்கு ரூ.1 லட்சம், அமெரிக்காவிலிருந்து வருவோருக்கு ரூ.1.5 லட்சம் என்று கட்டணம் வசூலிக்கப்படுகிறது.