தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 6535 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை கொரோனா நோயாளி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, பலி எண்ணிக்கை 45 ஆனது.தமிழகத்தில் கொரோனா பரவுவது இன்னும் கட்டுப்படவில்லை. தினமும் புதிதாக 400, 500 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 526 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் 360 பேர் ஆண்கள். 166 பேர் பெண்கள். இவர்களுடன் சேர்த்து கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 6535 ஆக உயர்ந்துள்ளது. நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 219 பேரையும் சேர்த்து 1824 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் இன்று 12,999 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இது வரை 2 லட்சத்து 19,406 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.
தமிழகம் முழுவதும் நேற்று வரை 44 உயிரிழந்திருந்தனர். இன்று காலையில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 58 வயது கொரோனா நோயாளி உயிரிழந்தார். இதையடுத்து, கொரோனா பலி எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் நேற்று ஒரே நாளில் புதிதாக 279 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சென்னையில் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 3330 ஆக அதிகரித்துள்ளது. சென்னையைத் தவிர, செங்கல்பட்டில் 40 பேர், கடலூர் 3, பெரம்பலூர் 31, திருவள்ளூர் 26, நெல்லை 8, திருவண்ணாமலை 15, ராணிப்பேட்டை 10, அரியலூர் 16, தேனி 2, ராமநாதபுரம் 2, திண்டுக்கல், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், நீலகிரி, தஞ்சாவூர் மற்றும் திருச்சி தலா ஒருவருக்கு கொரோனா பாதித்துள்ளது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து சரக்கு வாகனங்களில் சென்ற தொழிலாளர்கள் மூலம்தான் அரியலூர், கடலூர், பெரம்பலூர், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது. தற்போது கோயம்பேடு மார்க்கெட், திருமழிசைக்கு மாற்றப்பட்டு, சமூக இடைவெளி பின்பற்றப்பட்டு வருகிறது.