தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு உத்தரவிட்ட ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது.கொரோனா பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு மே 17ம்தேதி வரை நீடிக்கிறது. எனினும், கடந்த மே 4ம் தேதி ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு அறிவித்த போது, பல கட்டுப்பாடுகளை நீக்கியது. அதில் மதுக்கடைகளைத் திறக்கவும் அனுமதி அளித்தது.
இந்நிலையில், சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் மே 7ம் தேதி முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன.இதற்கிடையே, மதுபானக் கடைகள் திறப்பதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ராம்குமார் ஆதித்தன் என்பவர் உள்படப் பலரும் பொதுநலன் மனுக்களைத் தாக்கல் செய்தனர். இவற்றை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்திய நாராயணா ஆகியோர் வீடியோகான்பரன்ஸ் மூலம் விசாரித்தனர். அவர்கள் பிறப்பித்த உத்தரவில், டாஸ்மாக் மதுபானக் கடைகளைத் திறக்க அனுமதி அளித்தனர். எனினும், பல்வேறு நிபந்தனைகளை விதித்தனர்.
ஆனால், சென்னை தவிர மற்ற இடங்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டதுமே நீண்ட வரிசையில் குடி மகன்கள் நிற்கத் தொடங்கினர். சில ஊர்களில் சமூக இடைவெளியே பின்பற்றாமல் கூட்டநெரிசலாகக் காணப்பட்டது. போலீசாராலும் அந்த கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த காட்சிகள் தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்பாகின.
இதையடுத்து, வழக்கறிஞர் ராஜேஷ் ஐகோர்ட்டில் ஒரு மனுத் தாக்கல் செய்தனர். அதில், டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டதில், எந்த கட்டுப்பாடுகளும் பின்பற்றப்படவில்லை. சமூக இடைவெளி இல்லாமல் கூட்டம் அலைமோதியதால், கொரோனா தொற்று மேலும் பரவும் அபாயம் உள்ளது. அதனால், மதுக்கடைகளை மூடுவதற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதை விசாரித்த நீதிபதிகள், நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளை மீறியதால், டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட உத்தரவிடுகிறோம். ஊரடங்கு அமலில் இருக்கும் வரை மதுக்கடைகளைத் திறக்கக் கூடாது. ஆன்லைன் மூலமாக மட்டுமே மது விற்பனை செய்ய அனுமதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு, நேற்று சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனுத் தாக்கல் செய்திருக்கிறது. அதில், நாடு முழுவதும் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மதுபானக் கடைகளில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தற்போது மதுபானக் கடைகளை மூடினால் அரசுக்கு வருவாய் பாதிக்கும். ஏற்கனவே அரசுக்கு இதர வரி வருவாய் மிகவும் குறைந்து விட்டதால், மதுபானக் கடைகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு நாளை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. அப்போது, தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படுமா என்பது தெரிய வரும்.