சென்னையில் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. நேற்றும் புதிதாக 538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றுத் திரும்பியவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பின்பு, தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்திருந்தது.
ஆனால், கடந்த மாதம் 25ம் தேதியன்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் திடீரென 50 ஆயிரம் பேருக்கு மேல் குவிந்ததால், மீண்டும் கொரோனா பரவல் அதிகமானது. இப்போது தினமும் புதிதாக 500 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 798 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 514 பேர் ஆண்கள். 284 பேர் பெண்கள். இவர்களுடன் சேர்த்து கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 8002 ஆக உயர்ந்துள்ளது. நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 92 பேரையும் சேர்த்து 2051 பேர் குணமடைந்துள்ளனர்.
நேற்று மட்டும் 11,584 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இது வரை 2 லட்சத்து 43,952 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.
சென்னையில் தினமும் சுமார் 500 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு வருகிறது. நேற்றும் 538 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, சென்னையில் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 4391 ஆக அதிகரித்துள்ளது. சென்னையைத் தவிர, செங்கல்பட்டில் 90 பேர், அரியலூர் 33, திருவள்ளூர் 97, திருவண்ணாமலை 10, காஞ்சி 8, ராமநாதபுரம் 4, தென்காசி 3, தூத்துக்குடி 3, தர்மபுரி 2, திண்டுக்கல், பெரம்பலூர், ராணிப்பேட்டை, வேலூர், விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு கொரோனா பாதித்துள்ளது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து சரக்கு வாகனங்களில் சென்ற தொழிலாளர்கள் மூலம்தான் அரியலூர், கடலூர், பெரம்பலூர், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது. தற்போது சென்னையில் 4371 பேருக்கும், கடலூர் 395, அரியலூர் 308, செங்கல்பட்டு 356, திருவள்ளூர் 440, விழுப்புரம் 298, கோவை 141, காஞ்சிபுரம் 132, மதுரையில் 121 பேருக்கும் கொரோனா பரவியிருக்கிறது.