தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, ஜூன் 1ம் தேதி முதல் தொடங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். மேலும், பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வரும் 27ம் தேதி தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு வரும் 17ம் தேதியுடன் முடிகிறது. அதே சமயம், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், இம்மாதம் 31ம் தேதி வரை பொது போக்குவரத்துக்குத் தடை உள்ளிட்ட சில கட்டுப்பாடுகள் தொடரலாம் எனத் தெரிகிறது.
இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று(மே12) காலையில் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
வரும் ஜூன் 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும். மாணவர்களை சமூக இடைவெளியுடன் அமரவைத்துத் தேர்வு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.இதன்படி, ஜூன் 1ம் தேதி மொழிப்பாடம், ஜூன் 3 ஆங்கிலம், ஜூன் 5 கணிதம், ஜூன் 6 விருப்ப மொழிப்பாடம், ஜூன் 8 அறிவியல், ஜூன் 10 சமூக அறிவியல் என்ற அட்டவணைப்படி தேர்வுகள் நடைபெறும்.
அதே போன்று, பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஒரு பாடத்திற்கான தேர்வு ஜூன் 2ம் தேதி நடைபெறும். வரும் 27ம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும்.
மேலும், பள்ளிகள் திறப்பு குறித்து இது வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. கொரோனா பரவுவது கட்டுப்படுவதைப் பொறுத்து பின்னர், பள்ளிகள் திறப்பு தேதி அறிவிக்கப்படும்.
இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார்.