சிறுகுறு நடுத்தர தொழில்களுக்கு மொத்தம் 3 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்படும். இதன்மூலம் 45 லட்சம் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது 3 முறை நீட்டிக்கப்பட்டாலும் பல கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. மே 17ம் தேதி முடிவடையும் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படும் என்று பிரதமர் மோடி நேற்று முன் தினம் இரவு அறிவித்துள்ளார். நாட்டு மக்களுக்குத் தொலைக்காட்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது, முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்காக ரூ.20 லட்சம் கோடி நிதித் திட்டத்தையும் அறிவித்தார். ஆனால், அந்த திட்டத்தின் சாரம்சங்கள் குறித்து அவர் விளக்கவில்லை. அதை நிதியமைச்சகம் அறிவிக்கும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், நேற்று மாலை 4 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பொருளாதாரம், உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், மக்கள் நெருக்கம், தேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் பல்வேறு நிதிச் சீர்திருத்தங்களைப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அதன் சாரம்சங்களை இன்று முதல் வெளியிட உள்ளேன். உற்பத்தி, நிலம், தொழிலாளர், நிதி, சட்டம் போன்றவற்றில் மாற்றங்கள் கொண்டு வரப்படும்.
உள்ளூர் தயாரிப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். உள்ளூர் பொருட்களுக்குச் சர்வதேச அளவில் சந்தையை ஏற்படுத்த முயற்சிகள் எடுக்கப்படும்.
இது வரை ஜன்தன் கணக்குகளில் ரூ.52,606 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. சம்பளம் இல்லாத பிற கணக்குகளில் வருமான வரி விகிதம் 25 சதவீதமாகக் குறைக்கப்படும். வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யும் கால அவகாசம் அக்.20 வரை நீட்டிக்கப்படும்.
சிறு குறு நடுத்தர தொழில்களுக்கு மொத்தம் 3 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்படும். இதன்மூலம் 45 லட்சம் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும். இந்த கடன்கள் வரும் அக்.31ம் தேதி வரை வழங்கப்படும். இந்த கடன்களுக்குச் சொத்து உத்தரவாதம் தேவையில்லை.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.