சாலையோர வியாபாரிகளுக்குக் கடன் வழங்கும் திட்டம் உள்பட பல்வேறு அறிவிப்புகளை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.கடந்த 12ம் தேதியன்று இரவு 8 மணிக்குப் பிரதமர் மோடி தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்காக ரூ.20 லட்சம் கோடி நிதித் திட்டத்தையும் அறிவித்தார். இந்த திட்டங்கள் குறித்து 13ம் தேதியன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பத்திரிகையாளர்களிடம் விளக்கினார். அப்போது சிறுகுறு நடுத்தரத் தொழில்களுக்கான திட்டங்களை அறிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக, விவசாயிகளுக்கான அறிவிப்புகளை நேற்று நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அவர் கூறியதாவது:ஏற்கனவே 3 கோடி சிறு விவசாயிகளுக்குக் குறைந்த வட்டியில் 4.22 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசம் வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 25 லட்சம் புதிய விவசாயிகள் கடன் அட்டைகள் மூலம் ரூ.25 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகள் கடன் அட்டை மூலம் 2 கோடியே 50 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் கோடி கடன் வழங்கப்படும். மீனவர்கள், கால்நடை வளர்ப்பவர்கள் ஆகியோருக்கும் கடன் அட்டைகள் மூலம் கடன் வழங்கப்படும்.
நபார்டு வங்கியின் மூலம் கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராமப்புற வங்கிகளுக்குக் கடந்த மார்ச் வரை ரூ.29,500 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் வழங்குவதற்காகக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் ஊரக வங்கிகளுக்கு மேலும் ரூ.30 ஆயிரம் கோடி கடன் வழங்கப்படும். இதன்மூலம் 3 கோடி விவசாயிகளுக்குக் கடன் கிடைக்கும்.
ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக மாநிலங்களுக்கு ரூ.4,200 கோடி வழங்கப்பட்டுள்ளது. வேளாண் உற்பத்தி திட்டங்களுக்காகக் கடந்த மார்ச் முதல் மாநில அரசு நிறுவனங்களுக்கு ரூ.6,700 கோடி வழங்கப்பட்டுள்ளது. வனம் மற்றும் வனம் சார்ந்த பகுதிகளில் வேலைவாய்ப்பை உருவாக்க ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் எந்த பகுதியிலும் உள்ள கடைகளில் ரேஷன் பொருட்கள் வாங்கும் வகையிலான ஒரே நாடு-ஒரே ரேஷன் கார்டு திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முழுமையாகச் செயல்படுத்தப்படும்.
பிறமாநில தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி அல்லது கோதுமை மற்றும் ஒரு கிலோ கொண்டைக்கடலையும் அடுத்த 2 மாதங்களுக்கு வழங்கப்படும். இதன்மூலம், 8 கோடி புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பயனடைவார்கள். இதற்கு மத்திய அரசு ரூ.3,500 கோடியை ஒதுக்கீடு செய்யும். மாநில அரசுகள் பிறமாநில தொழிலாளர்களுக்கு உணவு தானியம் வழங்கும் இந்த திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.வெளிமாநில தொழிலாளர்களுக்காக அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த வீடுகள் வெளிமாநில தொழிலாளர்களுக்குக் குறைந்த வாடகைக்கு விடப்படும். குறைந்த வாடகையில் வீடுகள் கட்டி வழங்கும் நிறுவனங்கள், அமைப்புகளுக்கு மத்திய அரசின் மானியம் வழங்கப்படும்.
வெளிமாநில தொழிலாளர்களுக்கு, மாநில பேரிடர் நிதியிலிருந்து தங்கும் இடம், உணவு மற்றும் குடிநீர் வசதி செய்து கொடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் இதற்காக மாநிலங்களுக்கு ரூ.11,002 கோடி வழங்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயம் செய்யத் தேசிய அளவில் குழு ஏற்படுத்தப்படும். 10க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் நிறுவனங்களுக்கு இ.எஸ்.ஐ. (தொழிலாளர் ஈட்டுறுதி திட்டம்) வசதி அளிக்கும் திட்டம் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். 12 ஆயிரம் சுயஉதவிக் குழுக்கள் மூலம் 3 கோடி முகக் கவசங்களும், 1 லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் கிருமிநாசினியும் தயாரித்து வழங்கப்பட்டுள்ளது.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியம் 182 ரூபாயிலிருந்து 202 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக தற்போது வரை ரூ.10 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது.அனைத்து துறைகளிலும் பெண்கள் வேலை பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதுடன், இரவு பணியில் ஈடுபடவும் அப்போது அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் தொடக்கநிலை மூலதனத்துடன் கடன் வழங்கப்படும். இதற்காக மொத்தம் ரூ.5 ஆயிரம் கோடி சிறப்புக் கடனாக வழங்கப்படும். இதன் மூலம் கிட்டத்தட்ட 50 லட்சம் பேர் பயன் அடைவார்கள்.
அமைப்புசாரா தொழிலாளர்கள், ஒரு ஆண்டு வேலை செய்து இருந்தாலும் கிராஜுவிட்டி கிடைக்க வகை செய்யப்பட்டு உள்ளது. சிறு தொழில் நிறுவனங்களுக்கு முத்ரா - சிசு திட்டத்தின் கீழ் ரூ.1.62 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ரூ.1,500 கோடி வரை நிவாரணம் வழங்கப்படும்.வீட்டு வசதி திட்டங்களின் மேம்பாட்டுக்காக ரூ.70 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். கட்டுமானப் பொருட்களின் தேவையும் அதிகரிக்கும். ரூ.6 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ள நடுத்தர குடும்பத்தினருக்கான வீட்டுக்கடன் மானியத் திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்படும்.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.