தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 9674 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2240 பேர் குணமடைந்துள்ளனர்.தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 253 பேர் ஆண்கள். 194 பேர் பெண்கள். இவர்களுடன் சேர்த்து கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 9674 ஆக உயர்ந்துள்ளது. நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 64 பேரையும் சேர்த்து 2240 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று 11,773 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மாநிலம் முழுவதும் இது வரை 2 லட்சத்து 91,432 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.
சென்னையில் தினமும் சராசரியாக 500 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு வந்தது. நேற்று சற்று குறைந்து 383 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சென்னையில் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 5625 ஆக அதிகரித்துள்ளது. நேற்று, சென்னையைத் தவிர, செங்கல்பட்டில் 9 பேர், திருவள்ளூர் 15, திருவண்ணாமலை 8, காஞ்சிபுரம் 8, கன்னியாகுமரி 5, பெரம்பலூர் 4 மற்ற மாவட்டங்களில் 2, 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து சரக்கு வாகனங்களில் சென்ற தொழிலாளர்கள் மூலம்தான் அரியலூர், கடலூர், பெரம்பலூர், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது.ஆரம்பத்தில் கொரோனா பாதித்துக் குணமடைந்தவர்களின் சதவீதம் அதிகமாக இருந்தது. ஆனால், தற்போது குணம் அடைபவர்களின் எண்ணிக்கை விகிதத்தை விடப் புதிதாகத் தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை தான் அதிகமாகி வருகிறது. கொரோனா பாதித்த 2 பேர் நேற்று உயிரிழந்ததை அடுத்துப் பலி எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.