மேற்கு வங்கம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், ஜார்கண்ட் மாநில அரசுகள், தங்கள் மாநில தொழிலாளர்களைத் திருப்பி அழைப்பதற்குச் சிறப்பு ரயில்களை அனுமதிக்க மறுக்கின்றன என்று ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் குற்றம்சாட்டினார்.நாடு முழுவதும் கொரோனா பரவாமல் தடுப்பதற்காகப் பிரதமர் மோடி, கடந்த மார்ச் 24ம் தேதியன்று நள்ளிரவு முதல் பொது ஊரடங்கை அறிவித்தார். திடீரென ஊரடங்கு அறிவித்ததால், பஸ், ரயில் உள்ளிட்ட எந்த போக்குவரத்து வசதியும் இல்லாமல் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவதியடைந்தனர். வேலையும் இழந்து சாப்பிடவும் வழியில்லாமல் லட்சக்கணக்கான தொழிலாளர்கள், 1000 கி.மீ. தூரத்திற்கு நடக்கத் தொடங்கினர்.
இதனால், மத்திய அரசின் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்புவதற்குச் சிறப்பு ரயில்களை விட மத்திய அரசு முடிவெடுத்தது. ஆனால், ஒரே நாளில் பல ஆயிரம் பேர் தங்கள் மாநிலங்களுக்குத் திரும்பினால், அவர்கள் அனைவரையும் கொரோனா சோதனைக்கு உட்படுத்தி, தனிமையில் வைத்து சோறு போடுவது கஷ்டம் என்று பல மாநில அரசுகள், அந்த ரயில்களை மொத்தமாக அனுமதிக்க மறுத்து வருகின்றன.
இந்நிலையில், மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் கூறியதாவது:
மேற்கு வங்கம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், ஜார்கண்ட் ஆகிய மாநில அரசுகள், தங்கள் மாநிலத் தொழிலாளர்களைச் சொந்த ஊருக்கு அனுப்புவதற்கான சிறப்பு ரயில்களை அனுமதிக்க மறுக்கின்றன. இது மிகவும் கவலை அளிக்கிறது.மேற்கு வங்க அரசு 2 ரயில்களை மட்டுமே அனுமதித்தது. அதன்பிறகு, உள்துறை அமைச்சர் அமித்ஷா கடிதம் எழுதிய பிறகு மேலும் 8 ரயில்களை அனுமதிப்பதாக மம்தா பானர்ஜி அரசு அறிவித்தது. ஆனால், இது வரை 5 ரயில்களை மட்டுமே அனுமதித்துள்ளது.
மேற்குவங்க அரசு, ஒரு மாதத்தில் 105 ரயில்களை அனுமதிப்பதற்குப் பதிலாக ஒரே நாளில் 105 ரயில்களை அனுமதிக்க வேண்டும். மாநில அரசுகள் அனைத்து சிறப்பு ரயில்களையும் உடனடியாக இயக்க அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு பியூஸ் கோயல் கூறினார்.