கொரோனா ஊராடங்கு பெரும்பாலான மக்களுக்கு வேலை இழப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் பெரிதும் பாதிப்புகளாகி இருக்கிறது திரையுலகம். சினிமா தியேட்டர்கள் மூடியிருப்பதால் ஏற்கெனவே ரிலீஸ் செய்யத் திட்டமிட்டு முடிக்கப்பட்ட படங்கள் ரிலீஸ் செய்ய முடியாத நிலை உள்ளது.இத்தருணத்தை ஒடிடி இணைய தளங்கள் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. புதிய படங்களுக்குக் கோடிகளைக் கொட்டிக் கொடுத்து வாங்கத் தயாராக உள்ளனர். அதற்கு சில தயாரிப்பாளர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
தமிழில் ஜோதிகா நடித்துள்ள பொன் மகள் வந்தாள் ஒடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் வெங்கட் பிரபு தயாரித்த ஆர்கே நகர் படம் ஒடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இந்நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் நடித்துள்ள குலாபோ சித்தாபோ என்ற படம் தியேட்டரில் இல்லாமல் நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. கடந்த ஏப்ரல் 17 ம் தேதி இப்படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தனர். தியேட்டர்கள் மூடியிருப்பதால் ஒடிடி தளத்தில் ரிலீஸ் செய்கின்றனர். வரும் ஜூன் 12ம் தேதி அமேசான் பிரைமில் இப்படம் வெளியாகவிருக்கிறது. இதில் அமிதாப்புடன் ஆயுஷ்மான் குரானா, வித்யா பாலன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இதுபற்றி அமிதாப்பச்சன் கூறும்போது, திரையுலகுக்கு 1969ம் ஆண்டு வந்தேன். குலாபோ சித்தபோ வரும் ஜூன் மாதம் ஒடிடி தளத்தில் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாக இருக்கிறது. அற்புதமான அனுபவமாக இதை உணர்கிறேன். டிஜிட்டல் தள சவாலில் நானும் இருப்பது பெருமையாக இருக்கிறது என்றார்.