இன்று லெனின் சிலை; நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா ராமசாமி சிலை” என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 25 ஆண்டுகளாக திரிபுராவில் ஆட்சி நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவியது.
மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 59 தொகுதிகளுக்கு வாக்கு எண்ணப்பட்டது. ஒரு தொகுதியில் வேட்பாளர் இறந்ததால், அங்கு வாக்குகள் எண்ணப்படவில்லை. இதில் 35 இடங்களில் பாஜக வெற்றிபெற்றது. அதன் கூட்டணி கட்சியான பூர்வகுடி மக்கள் கட்சி 8 இடங்களை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், தெற்கு திரிபுராவில் உள்ள பிலோனியா என்ற இடத்தில் மார்க்சிஸ்ட் ஆட்சி காலத்தில் வைக்கப்பட்ட லெனின் சிலை ஜேசிபி இயந்திரம் மூலம் நேற்று அகற்றப்பட்டது. லெனின் சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பும் ஆதரவும் வலுத்துள்ளது. லெனின் சிலை அகற்றப்பட்டதை இந்தியாவெங்கும் பாஜகவினர் கொண்டாடி மகிழ்கின்றனர்.
இது குறித்து தமிழக பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா, “லெனின் யார் அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு. கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு. லெனின் சிலை உடைக்கப்பட்டது. திரிபுராவில் இன்று லெனின் சிலை; நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா ராமசாமி சிலை” என்று ராஜா குறிப்பிட்டுள்ளார். இதற்கு தமிழகமெங்கும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.