பெரியார் சிலையை உடைக்கும் துணிச்சல் பாஜகவுக்கு இல்லை அப்படி நடந்தால்.. - தமிமுன் அன்சாரி

பெரியார் சிலையை உடைக்கும் துணிச்சல் பாஜகவுக்கு இல்லை அப்படி நடக்குமேயானால் தமிழின கொந்தளிப்புகளை யாராலும் அடக்க முடியாது மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.

Mar 6, 2018, 16:57 PM IST

பெரியார் சிலையை உடைக்கும் துணிச்சல் பாஜகவுக்கு இல்லை; அப்படி நடக்குமேயானால் தமிழின கொந்தளிப்புகளை யாராலும் அடக்க முடியாது மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.

தெற்கு திரிபுராவில் உள்ள பிலோனியா என்ற இடத்தில் மார்க்சிஸ்ட் ஆட்சி காலத்தில் வைக்கப்பட்ட லெனின் சிலை இயந்திரம் மூலம் நேற்று அகற்றப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இது குறித்து முகநூலில் கருத்து தெரிவித்த தமிழக பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா, “கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு. லெனின் சிலை உடைக்கப்பட்டது. திரிபுராவில் இன்று லெனின் சிலை; நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா ராமசாமி சிலை” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் இதுதொடர்பாக தனியார் இணையதளம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ள தமிமுன் அன்சாரி, “திரிபுராவில் பங்களாதேஷில் இருந்து குடியேறிய வங்காளிகளுக்கு மத்தியில் துவேஷ உணர்வுகளை தூண்டிவிட்டு, அவர்களின் ஆதரவோடு குறுக்கு வழியில்தான் பாஜகவினர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர்.

இப்போது வெற்றி மமதையில் அங்குள்ள லெனின் சிலையை சேதப்படுத்தியுள்ளனர். லெனின் சிலையை தங்களது குறியீடாக, 25 ஆண்டு கால ஆட்சியை கொண்டாடும் விதமாக திரிபுராவில் கம்யூனிஸ்ட்டுகளும், அவர்களுடைய ஆதரவாளர்களும் வைத்துள்ளனர். இன்று அவர்கள் தோல்வியை தழுவியிருக்கக் கூடிய சூழலில், வெற்றி பெற்றவர்கள் அந்த சிலையை சேதப்படுத்தியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனை கண்டிக்கிறேன்.

அதேபோல் சம்பந்தமில்லாமல், இங்கு பெரியார் சிலையையும் உடைப்போம் என்று எச்.ராஜா கூறியிருப்பது மிக மிக கண்டிக்கத்தக்கது. எச். ராஜாவின் இந்த கருத்து அதிர்ச்சியை தருகிறது. பெரியார் சிலையை உடைக்கும் துணிச்சல் பாஜகவுக்கு இல்லை என்பது நாடறிந்தது. அப்படி நடக்குமேயானால் அதனால் நடக்கக்கூடிய தமிழின கொந்தளிப்புகளை யாராலும் அடக்க முடியாது என்பதும் தெரியும்.

கம்யூனிஸ்ட்டுகளையும், தமிழின பற்றாளர்களையும், திராவிட இயக்க உணர்வாளர்களையும், சிறுபான்மையினரையும் சம்மந்தமில்லாமல் தீண்டும் விதத்தில் பேசுவதை அவர் வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

வெறியை ஊட்டக்கூடிய வகையில் அவர் தொடர்ந்து பேசி வருவதை இனியும் பொருத்துக்கொள்ளக் கூடாது. தமிழக அரசு அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். ஏனென்றால் தொடர்ந்து மதவெறியை, இனவெறியை, தமிழின விரோத கருத்துக்களை, திராவிட இயக்கத்தோடு மோதும் சிந்தனைகளை அவர் பரப்பி வருகிறார்" என்று கூறியுள்ளார்.

 

You'r reading பெரியார் சிலையை உடைக்கும் துணிச்சல் பாஜகவுக்கு இல்லை அப்படி நடந்தால்.. - தமிமுன் அன்சாரி Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை