பிராமணர் கட்சியில் சேரும் வி.பி.துரைசாமி..

Dmk leader V.P.Duraisamy to join BJP today.

by எஸ். எம். கணபதி, May 22, 2020, 09:46 AM IST

திமுகவில் துணை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட வி.பி.துரைசாமி, பாஜகவில் சேருகிறார்.திமுகவில் மூத்த தலைவர்களில் ஒருவரான வி.பி.துரைசாமி, துணைப் பொதுச் செயலாளராக இருந்து வந்தார். திமுக தலைவராகக் கருணாநிதி இருந்த போது, 1989 முதல் 1991 வரையும், 2006 முதல் 2011 வரையும் துணைச் சபாநாயகராகவும், ஒரு முறை எம்.பி.யாகவும் இருந்தார்.


சமீபத்தில் நடந்த மாநிலங்களவைத் தேர்தலில் வி.பி.துரைசாமி தனக்கு சீட் தர வேண்டுமென்று கட்சித் தலைமையிடம் கோரினார். ஆனால், அவருக்கு எம்.பி. சீட் தரப்படவில்லை. அதே சமயம், அவர் சார்ந்த அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த அந்தியூர் செல்வராஜுக்கு அந்த வாய்ப்பு தரப்பட்டது. இதனால், அதிருப்தியிலிருந்த துரைசாமி கடந்த 3 நாட்களுக்கு முன்பு, தமிழக பாஜக அலுவலகத்திற்குச் சென்று, மாநில பாஜக தலைவர் எல்.முருகனைச் சந்தித்துப் பேசினார். அதன்பிறகு அவர் இந்து தமிழ் திசை நாளிதழுக்கு ஒரு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், எங்கள் சமுதாயத்தைச்(அருந்ததியர்) சார்ந்த முருகனும். எனது ஊரான ராசி புரத்தைச் சேர்ந்தவர்தான். அதனால் அவரை வாழ்த்துவதற்கு வந்தேன் என்று கூறியிருந்தார். முருகன் பதவியேற்று இத்தனை நாள் கழித்து ஏன் வந்தீர்கள் என்று கேட்டதற்கு, ஊரடங்கால் வீட்டுக்குள்ளேயே இருந்தேன். இப்போதுதான் வர முடிந்தது என்றார். அது மட்டுமல்லாமல், பிராமணர் கட்சியில் ஒரு அருந்ததியருக்குத் தலைவர் பதவி கிடைத்திருக்கிறது. அவரை வாழ்த்தப் போனால் என்ன தவறு? என்று கேட்டார்.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தான் கட்சியில் து.பொ.செ.வாக இருந்தாலும், நாமக்கல் மாவட்ட திமுகவில் யாரை மாற்றினாலும் என்னிடம் கட்சித் தலைமை ஆலோசிப்பதில்லை என்றும், அதேசமயம் தலைமைக் கழக பொறுப்புகளில் உள்ள துரைமுருகன், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு ஆகியோரின் மாவட்டங்களில் கட்சிப் பதவிகளில் மாற்றம் செய்தால் அவர்களிடம் தலைமை ஆலோசிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.


இந்த சூழ்நிலையில், துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து துரைசாமியை நீக்கி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். மேலும், அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த அந்தியூர் செல்வராஜ் எம்.பி.யை திமுக துணைப் பொதுச் செயலாளராக நியமித்தார்.
இதையடுத்து, இனிமேல் திமுகவில் சமரசத்திற்கு இடமில்லை என்பதைப் புரிந்து கொண்ட வி.பி.துரைசாமி, தன்னால் பிராமணர் கட்சி என்று வர்ணிக்கப்பட்ட பாஜகவில் போய்ச் சேரவுள்ளார். இன்று காலையில் அவர், தமிழக பாஜக அலுவலகமான கமலாலயத்திற்குச் சென்று முருகன் தலைமையில் பாஜகவில் இணையவுள்ளார். இதை அவரே தெரிவித்திருக்கிறார்.

You'r reading பிராமணர் கட்சியில் சேரும் வி.பி.துரைசாமி.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை