ஆர்.எஸ்.பாரதிக்கு அடுத்து தயாநிதி மாறன் கைதாவார் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ட்விட் போட்டிருக்கிறார்.திமுக அமைப்புச் செயலாளரும், ராஜ்யசபா எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி, கடந்த பிப்ரவரி 15ம் தேதி, சென்னையில் இளைஞரணி கூட்டத்தில் பேசும் போது, தலித் மக்கள் நீதிபதியாக வர முடிந்தது என்றால், அது திராவிட இயக்கங்கள் போட்ட பிச்சை என்று குறிப்பிட்டார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தலித் மக்கள் குறித்து அவதூறாக அவர் பேசி விட்டார் என்றும், மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கண்டனங்கள் எழுந்தன.
இதையடுத்து, அவர் ஒரு விளக்கம் அளித்தார். தலித் மக்கள் மீது கொண்டுள்ள கரிசனத்தால் தான் பேசியதைத் திரித்துக் கூறுகிறார்கள் என்றும், அப்படிப் பேசியதற்கு மன்னிப்பு மற்றும் வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறினார்.இதற்குப் பிறகு 100 நாட்கள் கடந்து விட்ட நிலையில், இன்று அதிகாலையில் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டார். பின்னர், அவருக்கு எழும்பூர் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.இந்த சூழலில், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது. வரவேற்கத்தக்கது. அடுத்து தயாநிதி மாறன் in Waiting list?. என்று குறிப்பிட்டிருக்கிறார்.
சமீபத்தில் தலைமைச் செயலாளர் சண்முகத்தை திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் அக்கட்சியினர் சந்தித்து விட்டு வந்த போது, தயாநிதி மாறன் அளித்த பேட்டியும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. தலைமைச் செயலாளர் தங்களை அவமதித்ததாக டி.ஆர்.பாலு கூறினார். அப்போது தயாநிதி மாறன், நாங்கள் தீண்டத்தகாதவர்களா? என்ற வகையில் பேசியிருந்தார். தலித் மக்களைத் தீண்டத்தகாத மக்கள் போல் குறிப்பிட்டுப் பேசியதற்காக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தயாநிதி மாறன் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்தது தயாநிதி மாறன் என்று ஹெச்.ராஜா ட்விட் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் கூறியிருப்பது போல், தயாநிதியும் கைதாகலாம் என்ற பரபரப்பு அரசியல் வட்டாரங்களில் ஏற்பட்டிருக்கிறது.