ஆர்.எஸ்.பாரதிக்கு ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமீன்..

by எஸ். எம். கணபதி, May 23, 2020, 14:20 PM IST

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.திமுக அமைப்புச் செயலாளரும், ராஜ்யசபா எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி, கடந்த பிப்ரவரி 15ம் தேதி, சென்னையில் இளைஞரணி கூட்டத்தில் பேசும் போது, தலித் மக்கள் நீதிபதியாக வர முடிந்தது என்றால், அது திராவிட இயக்கங்கள் போட்ட பிச்சை என்று குறிப்பிட்டார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தலித் மக்கள் குறித்து அவதூறாக அவர் பேசி விட்டார் என்றும், மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கண்டனங்கள் எழுந்தன.


இதையடுத்து, அவர் ஒரு விளக்கம் அளித்தார். தலித் மக்கள் மீது கொண்டுள்ள கரிசனத்தால் தான் பேசியதைத் திரித்துக் கூறுகிறார்கள் என்றும், அப்படிப் பேசியதற்கு மன்னிப்பு மற்றும் வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறினார்.இதற்குப் பிறகு 100 நாட்கள் கடந்து விட்ட நிலையில், இன்று அதிகாலையில் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டார். அவர் தனக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்ற அச்சத்தில் தனிமையில் இருப்பதாக போலீசாரிடம் கூறினார். இதையடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்து விட்டு, பின்னர் சென்னை மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர்.

அப்போது திமுக வழக்கறிஞர்கள் ஆஜராகி, ஆர்.எஸ்.பாரதி மீதான எப்.ஐ.ஆரை ரத்து செய்யக் கோரிய மனு, ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளதால் அவரை கைது செய்ததே தவறு என்று வாதாடினர். இதையடுத்து, ஆர்.எஸ்.பாரதிக்கு ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் அளித்து நீதிபதி செல்வக்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து, ஆர்.எஸ்.பாரதி விடுதலை செய்யப்பட்டார்.


More Tamilnadu News