அதிமுக அரசின் ஊழல்கள்.. மாவட்ட வாரியாக பட்டியல்.. திமுகவில் வழக்கறிஞர்கள் குழு..

Dmk announce Advocates commitee to expose Admk scandals in districts.

by எஸ். எம். கணபதி, May 24, 2020, 14:46 PM IST

அ.தி.மு.க. அரசின் ஊழல்களை மாவட்ட வாரியாகப் பட்டியலிடுவதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வழக்கறிஞர்கள் குழு அமைக்க திமுக முடிவு செய்துள்ளது.
திமுக தலைவர் மு.கஸ்டாலின் தலைமையில், அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் - சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று (மே24) வீடியோ கான்பரன்சில் நடைபெற்றது. முதலில், புதிய துணைப் பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ் எம்.பி.,க்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை கைது செய்தபோது, அவருக்கு இடைக்கால ஜாமீன் பெற்றிட வாதாடிய தி.மு.க. சட்டத்துறைக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தின் முடிவில் நிறைவேற்றப்பட்டன தீர்மானங்கள் வருமாறு :
திமுகவின் “ஒன்றிணைவோம் வா” என்ற ஆக்கப்பூர்வமான திட்டத்திற்கு மக்கள் அளித்த அமோக வரவேற்பை பொறுத்துக் கொள்ள முடியாமலும், கொரோனா நோய்த் தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றும் நடவடிக்கைகள் அனைத்திலும் குளறுபடிகளினாலும் முழுத் தோல்வியடைந்து விட்ட விரக்தியிலும், திமுகவினர் மீது பொய் வழக்குப் போட்டு கைது செய்யும் படலத்தை அ.தி.மு.க. அரசு தொடங்கியுள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.

முதலமைச்சர், துணை முதலமைச்சர், உள்ளாட்சித் துறை அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் பலர் மீது “கொரோனா ஊழல்” புகார் அளித்த கழக அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.ஆர்.எஸ்.பாரதி அவர்களை “கொரானா காலத்திலும்” அவசரமாக அதிகாலையில் கைது செய்தது, “ஆய்வு கூட்டங்களுக்கு சட்டமன்ற உறுப்பினரை ஏன் அழைக்கவில்லை” என்று கேட்டதற்காக கரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் செந்தில்பாலாஜி மீது மாவட்ட ஆட்சித் தலைவரை புகார் கொடுக்க வைத்து, வழக்குப் பதிவு செய்தது; உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் ஊழல்களைத் தட்டிக்கேட்கும் கோவை மாநகர் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் மீதும், கோவை - திருப்பூர் பகுதிகளில் உள்ள கழக நிர்வாகிகள் மீதும் போலீசை ஏவி விட்டு வழக்குப் பதிவு செய்து - கைது செய்வது; கோவை மாநகர் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் எம்.எஸ்.ராமமூர்த்தியை கைது செய்தது; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஊழலைப் பதிவிட்டதற்காக கழக தகவல் தொழில்நுட்ப அணியின் ஐந்து நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தது - இதுதவிர ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அ.தி.மு.க. அமைச்சர்கள் காவல்துறையை தமது மனம்போன போக்கில் பயன்படுத்தி, திமுகவினனர் மீதும், கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் மீதும், அறிவிக்கப்படாத யுத்தத்தை நடத்தி, பொய் வழக்குப் போட்டுக் கைது செய்வது என்ற இந்த அனைத்தும் ஜனநாயக விரோத, தன்னிச்சையான, அராஜகச் செயல்கள் என்பதை விட - கருத்துச் சுதந்திரத்தையும், அரசியல் கட்சிகளின் ஜனநாயக முறையிலான செயல்பாட்டையும், கெட்ட எண்ணத்துடன் தடுக்கும் கேடுகெட்ட, அதிகார துஷ்பிரயோகம் ஆகும்.

“கொரோனா நோய்” ஜனவரி 7-ம் தேதியே தெரிய வந்தும் - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து யோசிக்கவே, 2 மாதங்கள் எடுத்துக் கொண்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. கேரளாவில் 30.1.2020 அன்று முதல் கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்ட பிறகும் - மாவட்டந்தோறும் கூலி கொடுத்து, ஆட்களைக் கூட்டி வந்து அரசு விழாக்களை நடத்தி, ஆனந்தப்பட்டுக் கொண்டார் முதலமைச்சர். வரப் போவதை அறிந்து கழகத் தலைவர் உரிய நேரத்தில் எச்சரிக்கை செய்தும், அதை அலட்சியப்படுத்தி, 24.3.2020 வரை சட்டமன்றத்தை நடத்தினார் எடப்பாடி பழனிசாமி. 22.3.2020 அன்றே நாடு முழுவதும், “சுய ஊரடங்கு” மத்திய அரசினால் அமல்படுத்தப்பட்டும் - பெற்றோர் பதற்றத்தைக் கண்டு கொள்ளாமல், மார்ச் 24-ஆம் தேதி பிளஸ்டூ மாணவர்களை தேர்வு எழுத வைத்தார்.

கொரோனா நோய் கண்டறியும் அதிவிரைவு பரிசோதனைக் கருவிகள் அதிக விலைக்கு வாங்கப்பட்டு - டெல்லி உயர்நீதிமன்றம் தலையில் ஓங்கிக் “குட்டிய” பிறகு - வேறு வழியின்றி, அவை தரமற்ற கருவிகள் என்று ஒப்புக் கொண்டு திருப்பிக் கொடுத்தார் முதலமைச்சர்.மார்ச் மாதத்திலிருந்து “ஊரடங்கு” ஒவ்வொரு கட்டமாக அறிவிக்கப்பட்டும் - மக்கள் அதிகம் கூடும் கோயம்பேடு சந்தையை, திருமிழிசைக்கு மாற்ற, இரண்டு மாதங்களுக்கு மேல் காலதாமதம் செய்தார். ஜனவரியில் வந்துவிட்ட கொரோனாவிற்கு, மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்வது குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்த, இரண்டு மாதங்கள் காலதாமதம் செய்தது அ.தி.மு.க. அரசு!
முன்பு எங்கும் கண்டும், கேட்டுமிராதபடி, “ஊரடங்கிற்குள் ஓர் ஊரடங்கை” அவசரகதியில் அறிவித்தார் முதலமைச்சர். “மூன்று நாட்களுக்குள் கொரோனா நோய் ஓடி விடும்” என்றார். “கொரோனா பணக்காரர்களின் வியாதி” என்றார். தாய்மார்கள் கண்ணீர் சிந்தி - கைகூப்பி எதிர்த்தும், பிடிவாதமாக உச்சநீதிமன்றம் வரை சென்று டாஸ்மாக் கடைகளைத் திறந்தார். குடிக்கும் மதுவிற்குக் கொடுத்த பாதுகாப்பை, குடிமக்கள் காய்கறி மற்றும் அத்தியாவசியத் தேவைகளை வாங்குவதற்குக் கொடுக்க மறுத்தார்.

கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில், நிர்வாக அளவில், அரசுத் துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பில், ஜனநாயக ரீதியாக அரசியல் கட்சிகளை அழைத்து, ஒரு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி ஆலோசித்து, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களையும் அரவணைத்துச் சென்று மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற அடிப்படைக் கடமையைப் புறக்கணித்ததால், படுதோல்வியடைந்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, தி.மு.க.வின் மக்கள் பணியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை; அப்படிப்பட்ட அபூர்வமான மனப்பான்மை அவருக்கு!
தறிகெட்டு நெறிகெட்டு, ஆட்சி அதிகாரத்தைத் தவறான வழியிலேயே பயன்படுத்திடத் துடிக்கிறார். கொரோனா காலத்தில், டெண்டர் ஊழல்கள், கொரோனா மருத்துவ உபகரணங்கள், கிருமிநாசினிகள், உள்ளிட்ட மருந்துகள் கொள்முதல்களில் ஊழல்கள் என்று ஒவ்வொரு நாளும் “கஜானாவைச் சுரண்டிக் கொள்ளையடிக்கும்” முதலமைச்சராலும், அவரது அமைச்சரவை சகாக்களாலும், தி.மு.க.,வின் ஜனநாயகப் பணிகளை - பேரிடரிலிருந்து மக்களைக் காக்கும் மனிதகுலத்திற்கான பணிகளை - சிறிதும் தாங்கிக் கொள்ள முடியாமல், தணலில் இட்ட புழுக்களாய்த் துடிக்கிறார்கள்.
மக்களுக்கு அன்னமிடும் கைகளுக்கு, மதோன்மத்தர்கள் விலங்கிடப் புறப்பட்டுள்ளார்கள். அதனால் அ.தி.மு.க.வினரையும், ஏன், அரசு அதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உள்ளிட்டோரையும்கூடப் பயன்படுத்தி, தி.மு.க.,வினருக்கு எதிராகப் புகார் கொடுக்கத் தூண்டி - காவல்துறையைக் கட்டவிழ்த்து விட்டு, சர்வமும் நானே எனக் கொக்கரித்து, அடக்குமுறை மூலம் காட்டாட்சி நடத்திவிட முடியும் என்று கனவு காண்கிறார் முதலமைச்சர் எடப்பாடி திரு.பழனிசாமி.

“கொரோனா தோல்விகளையும்”, “கொரோனா ஊழல்களையும்” திசை திருப்பி - கழகத்தின் “ஒன்றிணைவோம் வா” என்ற எழுச்சி ஊட்டும் மக்கள் நிகழ்ச்சியைத் தடுத்திடும் வகையிலும் - களங்கப்படுத்திடும் முறையிலும் செயல்படும் அ.தி.மு.க. அரசின் நிர்வாக அலங்கோலத்தை இனிமேலும் திமுகவால் பொறுத்துக் கொள்ள முடியாது என்று இந்தக் கூட்டம் கடும் எச்சரிக்கை விடுக்கிறது. எனவே, திமுகவினர் நேரடியாகக் களம் காணும் மாபெரும் போராட்டத்தை அ.தி.மு.க. அரசு சந்திக்க நேரிடும் என்று கடுமையாக எச்சரிக்கிறது.எடப்பாடி அரசின் அநீதியைத் தட்டிக் கேட்கவும், அ.தி.மு.க. அரசின் ஊழல்களை மாவட்ட வாரியாகப் பட்டியலிடவும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வழக்கறிஞர்கள் குழு அமைப்பது என்றும்; மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் இந்தக் கூட்டம் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.

You'r reading அதிமுக அரசின் ஊழல்கள்.. மாவட்ட வாரியாக பட்டியல்.. திமுகவில் வழக்கறிஞர்கள் குழு.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை