வேலுமணிக்கும், போலீசுக்கும் கடினமான துன்ப காலம்... திமுக கூட்டத்தில் எச்சரிக்கை..

Dmk warns minister velumani and police officers for fabricating cases against dmk men.

by எஸ். எம். கணபதி, May 24, 2020, 14:51 PM IST

பொய் வழக்கு போடும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கும், அவருக்கு ஒத்துழைக்கும் காவல் துறை அதிகாரிகளுக்கும் கடினமான துன்ப காலம் விரைவில் வரும் என்று திமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதிமுக அரசில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல் அமைச்சர்கள் மீதும் கோடிக்கணக்கில் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஏராளமான சொத்துக்கள் குவித்ததாக ஒரு வழக்கு உள்ளது.

அமைச்சர் வேலுமணி மீது பல பத்திரிகையாளர்கள் டன்கணக்கில் ஊழல் குற்றச்சாட்டுகளை வெளியிட்டிருக்கிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சம்பந்தி தொடர்புடைய நிறுவனத்திற்கே பல கோடி ரூபாய் சாலை டெண்டர்களை கொடுத்துள்ளதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை சி.பி.ஐ. விசாரிப்பதற்கு தற்காலிக தடை உத்தரவு உள்ளது.

இந்த சூழலில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது யாரெல்லாம் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறுகிறார்களோ, அவர்கள் மட்டும் உடனடியாக கைது செய்யப்படுகிறார்கள். சென்னையில் பத்திரிகையாளர் அன்பழகன் கைது செய்யப்பட்டு, பல மாதங்கள் சிறை வைக்கப்பட்டார். அதே போல், கோவையில் கொரோனா ஊழல் குறித்து செய்தி வெளியிட்டதற்காக சிம்ப்ளிசிட்டி என்ற ஆன்லைன் மீடியா எடிட்டர் சாம்ராஜா பாண்டியனை காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டதற்கும் எஸ்.பி.வேலுமணி தூண்டுதலே காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து ஆர்.எஸ்.பாரதி கூறுகையில், கோவை மாநகராட்சியில் ரூ.200 கோடிக்கு ஊழல் நடந்துள்ளது. 27 ரூபாய்க்கு வாங்க வேண்டிய வேப்ப எண்ணையை பல மடங்கு அதிகமான விலைக்கு வாங்கியிருக்கிறார்கள். நிறைய ஆதாரங்களை சேகரித்து வைத்துள்ளேன். அதனால், அமைச்சர் வேலுமணி தூண்டி விட்டு என் மீது வழக்கு போட்டு கைது செய்துள்ளார்கள் என்றார்.

இந்த சூழலில், திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், வீடியோ கான்பரன்சில் நடந்தது. கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டதாவது:
தி.மு.க.வினர் மீது பொய் வழக்கு போடுவதற்கும், கைது செய்வதற்குமாக, உள்ளாட்சியின் “ஊழல் அமைச்சராக இருக்கும்” வேலுமணி, காவல் துறைக்கும் நிஜ அமைச்சராக செயல்படுவதும், அவருக்கு காவல்துறை அதிகாரிகள் கைகட்டி நின்று கட்டளைகளை ஏற்றுச் சேவகம் செய்வதும், இன்றைக்கு எளிதாகவும் இன்பமாகவும் இருக்கலாம்.
ஆனால் அதற்கு சட்டத்தின் முன்பு தகுந்த பதிலைச் சொல்ல வேண்டிய கடினமான துன்ப காலம், வேலுமணிக்கும், அவருக்கு விரும்பித் துணை போகும் காவல்துறை அதிகாரிகளுக்கும், வெகு தொலைவில் இல்லை என்பதை மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் கடுமையாக எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

You'r reading வேலுமணிக்கும், போலீசுக்கும் கடினமான துன்ப காலம்... திமுக கூட்டத்தில் எச்சரிக்கை.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை