சென்னை, பெங்களூரு உள்பட 4 முக்கிய மாநகரங்களில் கொரோனா பரவல் இருந்தாலும், தடுப்பு பணிகளில் மாநகராட்சியானர் சிறப்பாகச் செயல்படுவதாக மத்தியக் குழுவினர் கூறியுள்ளனர்.நாடு முழுவதும் ஒரு லட்சத்து 39 ஆயிரம் பேருக்கு கொரோனா நோய் பரவியிருக்கிறது. குறிப்பாக, மும்பை, அகமதாபாத், சென்னை போன்ற பெருநகரங்களில் தான் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது.
இந்நிலையில், முக்கிய நகரங்களில் கொரோனா பரவல் மற்றும் தடுப்பு பணிகள் குறித்து மத்திய அரசு அனுப்பிய குழுவினர் ஆய்வு செய்தனர். இதன் பின், இக்குழுவினர் அளித்த அறிக்கையில், இந்தூர்(ம.பி), ஜெய்ப்பூர்(ராஜஸ்தான்), சென்னை(தமிழ்நாடு), பெங்களூரு(கர்நாடகா) ஆகிய மாநகரங்களில் கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைப் பணிகள் முறையாகச் செயல்படுவதாகக் கூறியுள்ளனர். இந்தூர், ஜெய்ப்பூரில் வீடு, வீடாகச் சென்று கொரோனா பரிசோதனைகளை முறையாகச் செய்து வருகின்றனர். இந்தூரில் சிறப்புக் குழுக்கள் அமைத்து ஒவ்வொரு பகுதியிலும் ஆய்வு செய்கின்றனர்.
ஜெய்ப்பூரில் கொரோனா அதிகமாகப் பரவ வாய்ப்பளிக்கும் காய்கறி, மளிகைக் கடைகள் போன்றவற்றின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளனர். சென்னை, பெங்களூருவில் அதிகமானோருக்கு கொரோனா பரவி வந்தாலும் இறப்பு விகிதம் 1 சதவீதத்திற்குக் குறைவாகவே உள்ளது. நாட்டின் இறப்பு விகிதம் 3 சதவீதமாக உள்ள நிலையில், இந்நகரங்களில் இறப்பு விகிதம் குறைவாக இருக்கிறது என்று மத்தியக் குழுவினர் தெரிவித்திருக்கின்றனர்.