கொரோனா ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில், சென்னை உள்பட 3 மாவட்டங்களில் மட்டும் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் எனத் தெரிகிறது.சீன வைரஸ் நோயான கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதியன்று ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இது தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டு, நாளையுடன்(மே31) முடிவடைகிறது. எனினும், ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிகாரிகள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது, சில இடங்களில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
குறிப்பாக, சென்னையில் 13 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. அதே போல், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் 800 முதல் ஆயிரம் பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், இந்த மாவட்டங்களில் ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. மத்திய அரசும், மும்பை, அகமதாபாத், சென்னை உள்ளிட்ட 13 நகரங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீண்டும் அதிகப்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறது. எனவே, அதற்கேற்ப தமிழக அரசும் நாளைக்குள் முடிவு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.