கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாகக் குறைப்பு.. விஜயபாஸ்கர் தகவல்..

corona test charge reduced to Rs.3000, says minister.

by எஸ். எம். கணபதி, Jun 2, 2020, 11:24 AM IST

தமிழகத்தில் தனியார் ஆய்வுக்கூடங்களில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாகக் குறைக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.இந்தியாவில் சுமார் 2 லட்சம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. கொரோனா பரிசோதனை செய்வதற்குச் சீனாவில் இருந்து ரேபிட் டெஸ்ட் கருவிகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்(ஐசிஎம்ஆர்) வாங்கி, மாநிலங்களுக்குக் கொடுத்தது. ஆனால், அவை சரியாகச் செயல்படவில்லை என்பதால், வாபஸ் பெறப்பட்டது.


தற்போது, ஆர்டி-பி.சி.ஆர் கருவிகள் மூலமாக கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த கருவியின் அடக்க விலை சுமார் ரூ.500தான் இருக்கும். பரிசோதனை செய்யும் ஆய்வுக்கூட ஊழியர்கள் அணியும் பாதுகாப்பு கவச உடை ஒன்றின் விலை ரூ.600. அதனால், கொரோனா பரிசோதனை செய்வதற்கு அதிகபட்சமாக ரூ.4500 வரை ஆய்வுக்கூடங்கள் வசூலிக்கலாம் என்று ஐ.சி.எம்.ஆர் அனுமதித்தது. ஆனால், தனியார் ஆய்வுக்கூடங்கள் இன்னும் அதிகமாக ரூ.6000 வரை வசூலித்தன.ஏற்கனவே மத்திய அரசின் மீதும், ஐ.சி.எம்.ஆர். மீதும் பலரும் கடும் விமர்சனம் செய்து வரும் நிலையில், இது மேலும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதையடுத்து, ரூ.4500 என்ற உச்சவரம்பு கட்டணத்தை ஐ.சி.எம்.ஆர். விலக்கிக் கொண்டது. மாநில அரசுகளே தனியார் ஆய்வுக் கூடங்களுடன் பேரம் பேசி, நியாயமான கட்டணத்தை நிர்ணயிக்கலாம் என்றும் அறிவுறுத்தியது.

இதற்குப் பின், தனியார் ஆய்வுக் கூடங்களுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்தியது. இதைத் தொடர்ந்து, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்கு 43 ஆய்வுக்கூடங்களும், 29 தனியார் ஆய்வுக்கூடங்களும் உள்ளன. அரசு பரிசோதனை கூடங்களில் கட்டணம் கிடையாது. தனியார் பரிசோதனை கூடங்களில் கொரோனா பரிசோதனை கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று மக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்தது.

இதையடுத்து, முதலமைச்சர் உத்தரவின் பேரில், தனியார் மருத்துவமனை நிர்வாகிகளுடன் பேசி, கொரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணத்தைக் குறைக்க வலியுறுத்தினேன். இதன்பின், தனியார் பரிசோதனை கூடங்களில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை ரூ.3 ஆயிரமாகக் குறைத்து வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் உள்ளவர்களுக்கு அதில் ரூ.2500 கழித்துக் கொள்ளப்படும். அந்த தொகை அரசால் வழங்கப்பட்டுவிடும்.
இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

You'r reading கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாகக் குறைப்பு.. விஜயபாஸ்கர் தகவல்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை