திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளராக உள்ள சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனுக்குக் கடந்த 3 நாட்கள் முன்பாக உடல்நலக் குறைவு ஏற்பட்டது. கொரோனா பரவிய காலத்தில் 62 வயதான இவருக்கு உடல்நலம் குறைந்ததால், கடந்த 2ம் தேதியன்று குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உடனடியாக, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதனால், அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால், ஆக்சிஜன் தெரபி அளிக்கப்பட்டது. நேற்று(ஜூன்4) அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், ஜெ.அன்பழகனின் உடல்நிலை குறித்து ரேலா மருத்துவமனை நிர்வாகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்று அவருக்கு வென்டிலேட்டர் மூலம் 80 சதவீத ஆக்சிஜன் செலுத்தப்பட்ட நிலையில், இன்று அது 67 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இவ்வாறு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.