தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது வரை 28,694 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.தமிழகத்தில் கடந்த சில நாட்களாகத் தினமும் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் புதிதாகக் குறைந்தது 1000 பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
மாநிலம் முழுவதும் நேற்று(ஜூன்6) மட்டும் புதிதாக 1438 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில், துபாயில் இருந்து வந்த 5 பேர், கத்தாரில் இருந்து வந்த 6 பேர், இலங்கையில் இருந்து வந்த ஒருவர், மகாராஷ்டிராவில் இருந்து வந்த 7 பேர், டெல்லி 14 பேர் என்று 33 பேருக்கு பாதிப்பு இருந்தது.தற்போது, தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,694 ஆக அதிகரித்துள்ளது. இதில் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 861 பேரையும் சேர்த்து மொத்தம் 15,763 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு நேற்று 12 பேர் உயிரிழந்ததை அடுத்துப் பலி எண்ணிக்கை 232 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நேற்று 14,968 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மொத்தத்தில் இது வரையில் 5 லட்சத்து 35,254 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. சென்னையில் மட்டுமே தினமும் 1000 பேருக்குக் குறையாமல் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. நேற்று அதிகபட்சமாக 1116 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சென்னையில் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 19,826 ஆக அதிகரித்துள்ளது.
செங்கல்பட்டில் 86 பேர், திருவள்ளூரில் 64 பேர், காஞ்சிபுரத்தில் 15 பேர், ராணிப்பேட்டையில் 14 பேர், திருவண்ணாமலையில் 13 பேர், திருச்சியில் 12 பேர் மற்றும் விழுப்புரம், விருதுநகர் மாவட்டங்களில் தலா 7 பேர் என்று கொரோனா தொற்று நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு பலியான 232 பேரில் 178 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். செங்கல்பட்டில் 14 பேர், திருவள்ளூரில் 11 பேர், காஞ்சிபுரத்தில் 4 பேர், மதுரையில் 3 பேர் மற்ற சில மாவட்டங்களில் ஓரிருவர் என உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது.