திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தரிசனம் தொடங்கியுள்ளது.நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு 4 முறை நீட்டிக்கப்பட்டாலும், பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஜூன் 1ம் தேதி முதல் கோயில்களைத் திறக்கவும் மத்திய அரசு அனுமதி அளித்தது.
ஆந்திராவில் பிரசித்தி பெற்ற திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலைத் திறப்பது குறித்துக் கடந்த வாரம் திருமலா திருப்பதி தேவஸ்தானம் போர்டு ஆலோசனை நடத்தியது. அதன்பிறகு, கடந்த 8ம் தேதியன்று கோயில் திறக்கப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்டன. 9ம் தேதி கோயில் ஊழியர்கள் அனுமதிக்கப்பட்டனர். 10ம் தேதி உள்ளூர் பக்தர்கள் மட்டும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
இன்று(ஜூன்11) முதல் வெளியூர் பக்தர்களும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஒரு மணி நேரத்தில் 500 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றியே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும், திருமலைக்கு வரும் வழியிலேயே அவர்களுக்குப் பரிசோதனையும் செய்யப்பட்டது.