தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 44 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். இது வரை 46,504 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது.தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில்தான் அதிக அளவில் கொரோனா பரவி வருகிறது. மாநிலம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 1843 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில், வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து வந்த 54 பேரும் அடக்கம். தமிழகத்தில் தற்போது கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 46,504 பேராக அதிகரித்துள்ளது.
மஸ்கட், கத்தாரில் இருந்து வந்த தலா 4 பேர், மலேசியாவில் இருந்து வந்த 2 பேர், தோகா, துபாய், யு.ஏ.இ. நாடுகளில் இருந்து வந்த தலா ஒருவர் மற்றும் மகாராஷ்டிரா 18, கர்நாடகா 4, டெல்லி 18, கேரளா3, ராஜஸ்தான்2, ஒடிசா, உபி, ஆந்திராவில் இருந்து தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.சென்னையில் மட்டும் நேற்று 1257 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சென்னையில் மட்டும் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 33,244 ஆக அதிகரித்துள்ளது.
செங்கல்பட்டில் நேற்று 120 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்துப் பாதிப்பு எண்ணிக்கை 3005 ஆக உள்ளது. இதே போல், திருவள்ளூரில் நேற்று 50 பேருக்குத் தொற்று உறுதியான நிலையில் மொத்தம் 1922 பேருக்கும், காஞ்சிபுரத்தில் நேற்று 39 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து அம்மாவட்டத்தில் 751 பேருக்கும் இது வரை கொரோனா பரவியிருக்கிறது. மற்ற மாவட்டங்களில் 500க்கும் குறைவானவர்களுக்கு நோய் பரவியிருக்கிறது. தமிழகத்தில் நேற்றுதான் அதிகபட்சமாக கொரோனா நோயாளிகள் 44 பேர் பலியாயினர். இதை அடுத்து, சாவு எண்ணிக்கை 479 ஆக உயர்ந்தது.